அண்ணாமலையை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிதறி கிடக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்
2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் இளமை படுமோசமாக மாறியுள்ளது. தேர்தலில் தோற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுகவில் 25 எம்எல்ஏக்கள் பெரும்பான்மை இல்லாமல் தவித்த விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். சட்டமன்றத்தில் இரு குழுக்களாக பிரிந்து கிடந்தனர்.
இதனிடையே அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு விஜய் கட்சியில் இணைந்து விட்டனர். இதனால் நிலைமை மோசமாவதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி அதிருப்தி எம்எல்ஏக்களை சந்தித்து அவர்களை சமாதானப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் அதிமுகவிலிருந்து 5 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 5 முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்தில் இன்று இணைந்துள்ளனர். இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாமலை வருகையால் ஆட்டம் காணும் அதிமுக
அதேசமயம் தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். நிச்சயமாக அண்ணாமலைக்கென ஒரு தனி ஆதரவு கூட்டம் இருக்கும் நிலையில் காலம் காலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வந்த திமுக மற்றும் அதிமுகவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே சி பழனிசாமி எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வாக்குகள் அண்ணாமலை பக்கம்
அதில், “அடிமட்ட அதிமுக தொண்டனின் குரல்...அண்ணா வணக்கம். ஏன் இப்படி நாம் மாற்றி யோசிக்க கூடாது. அண்ணாமலையை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. விஜயின் வெறுப்பு வாக்குகள் எல்லாம் அண்ணாமலைக்கு லாபமாக முடியும். அதுமட்டுமல்லாமல் தற்போதைய சூழலில் விஜயால் எல்லாம் தலித் மயம் ஆக்கப்பட்டு விட்டது. இதற்கு எதிராக மற்ற ஜாதி வாக்குகள் எல்லாம் அண்ணாமலையை நோக்கி திரும்பும் என்பதில் சந்தேகம் இல்லை.
எடப்பாடி பழனிசாமி.. அதிமுக என்ற ஒரே சித்தாந்தத்தை விட்டு விட்டு நாம் வேறு கோணத்தில் சிந்தித்தால் நமக்கு நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். நினைத்துப் பார்ப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும் நாம் இந்த வாய்ப்பையும் தவற விட்டு விட்டால் நமது சூழ்நிலை இன்னும் கடினம் ஆகிவிடும். நீங்கள் சிந்தித்து ஒரு ஆலோசனைக்கு வாருங்கள்” என தெரிவித்துள்ளார்.
