தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை அசால்ட்டாக எண்ணி விட்டோம் என முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக எம்.எல்.ஏ. வுமான கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்டாலின் உள்ளிட்ட 16 அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர். இந்த சூழலில் திமுகவை மீண்டும் மீட்டெடுக்கும் பொருட்டு பல கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட கழக செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நமக்கு எதிரான சதிகளை முறியடித்து அனைத்து தளங்களிலும் இனி அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து கே.என்.நேரு பேசுகையில், "எப்படி திமுக இயக்கம் கஷ்டங்களை சந்தித்த போதெல்லாம் வீறு கொண்டு எழுந்ததை பற்றி சொன்னார்கள். 1977ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆர் அலை வீசிய போது திருச்சி மாவட்டத்தில் ஒரு சில தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றோம். கடந்த தேர்தல்களிலும் நாம் திருச்சியில் எல்லா தொகுதிகளிலும் வென்றோம். ஆனால் இப்போது நம் கட்சிகாரர்களுக்கு எப்படியும் நாம் ஜெயித்து விடுவோம் என்ற எண்ணத்தில் கொஞ்சம் அசால்ட்டாக இருந்து விட்டோம்.
தவெக இவ்வளவு பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கவில்லை. ஆரம்பக்கட்ட கருத்து கணிப்புகளில் 5 சதவிகிதத்தில் இருந்து தொடங்கி கடைசியாக 30 சதவிகிதம் வரை பெறுவார்கள் என சொன்னார்கள். திமுகவுக்கு ஈடாக தமிழக வெற்றிக் கழகம் வந்து விட்டது. அதற்கு அவர்கள் கையாண்ட தந்திரம் மிகப்பெரியது. நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னது போல, இன்ஸ்டாகிராம் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் சென்று விட்டார்கள்.
நாம் தவெகவை எதிரியாக கருதவில்லை. நான் அதிமுகவை களத்தில் எதிர்த்து வேலைப் பார்த்த நிலையில் இடையில் தவெக வந்து விட்டது. எனவே இம்முறை எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் திமுக கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி அவர் புகழை பரப்பி கட்சியை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும்" என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
