Edappadi Palaniswamy | அதிமுக உட்கட்சி சண்டையால் பறிபோன உயிர்.. என்ன செய்யப் போகிறார் இபிஎஸ்?

அதிமுகவின் தலைமை நிர்வாகிகள் இடையே நடைபெறும் இந்த மோதலானது கடைக்கோடி தொண்டர்கள் வரை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகியான பூக்கடை மகேந்திரன் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.

G

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
Edappadi Palaniswamy | அதிமுக உட்கட்சி சண்டையால் பறிபோன உயிர்.. என்ன செய்யப் போகிறார் இபிஎஸ்?

அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகளை காரணம் காட்டி நிர்வாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எடப்பாடி பழனிசாமியை அதிர வைத்திருக்கிறது. இதனால் அவருக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிமுகவும் பிரச்சனைகளும்

1974 ஆம் ஆண்டில் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுச்சி பெற்றதில்லை. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணி -ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்து பின் ஒன்று சேர்ந்தது. அதன் பின்னர் ஜெயலலிதா இந்த இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்தி வந்தார்.

2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக மீண்டும் இரண்டாக உடைந்து ஓ.பன்னீர்செல்வம் அணி - எடப்பாடி பழனிசாமி அணியாக பிரிந்தது. அடுத்த சில மாதங்களில் மீண்டும் அதிமுக ஒன்று சேர்ந்து இரட்டை தலைமையில் நான்கரை ஆண்டுகள் ஆட்சி நடந்தது.

2026 சட்டமன்ற தேர்தலில் பிளவு

இந்த சூழலில் 2022 ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தல் தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியடைந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டிருந்தது.

இந்த சூழலில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இது எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்தது. இந்த சூழலில் பெரும்பான்மை இல்லாமல் தவித்த விஜயின் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்களின் ஒரு தரப்பு எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க, அவர் மறுத்தார்.

உடனடியாக அவருக்கு எதிராக 25 எம்எல்ஏக்கள் ஒன்று திரண்டனர். இதற்கிடையில் யாரும் எதிர்பாராத விதமாக 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டனர். இதனால் நிலைமை மோசமாவதை உணர்ந்து எடப்பாடி பழனிசாமி எதிர்தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்று சேர்த்து விட்டார். ஆனால் கட்சிக்குள் நடக்கும் பிரச்சனைகள் 100% சரியாகவில்லை.

மனவேதனையில் தொண்டர் தற்கொலை

அதிமுகவின் தலைமை நிர்வாகிகள் இடையே நடைபெறும் இந்த மோதலானது கடைக்கோடி தொண்டர்கள் வரை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகியான பூக்கடை மகேந்திரன் என்பவர் உட்கட்சி பிரச்சனைகளால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் அதிமுகவில் தொண்டனாக பிறக்க விருப்பப்படுவதாகவும் கூறி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழக அரசியல் களம் மட்டும் இல்லாமல் மக்களிடையேயும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி கண்கலங்கி நா தழுதழுக்க பேசினார்.

நிர்வாகிகளிடமிருந்து முக்கிய கோரிக்கை

இந்த சூழலில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் அதிமுகவில் கழகமே கோயில், அம்மாவே தெய்வம் என வாழ்ந்து வருகிறார்கள். இனியும் அவர்களை மன வேதனை அடைய விடாமல் வருங்கால இளைஞர்களுக்கு வழி விடுங்கள் என தெரிவித்தார்.

இந்த சட்டமன்றத் தேர்தலில் 75 ஆண்டுகள் கடந்த திமுக, 50 ஆண்டுகள் கடந்த அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மிகப்பெரிய இளைஞர் பட்டாளத்தை கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தன. இவ்விரு கட்சிகளிலும் மூத்த வயதுடைய உறுப்பினர்கள் தங்களுடைய பதவியையும், இத்தனை ஆண்டு காலம் அதிகாரத்தையும் இளைஞர்களுக்கு விட்டுக் கொடுக்க மறுப்பதே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தேர்தல் தோல்விக்குப் பின் திமுக தரப்பில் மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரை நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவில் அது தொடர்பான எந்தவித அறிகுறியும் இல்லை.

ராஜ் சத்யன் சொன்னது போல அதிமுக வருங்காலத்தில் செழித்து வளர வேண்டும் என்றால் இன்றைக்கும் அக்கட்சியில் உயிர்ப்புடன் இருக்கும் இளைஞர்களுக்கு பொறுப்பு வழங்கி அவர்களை வளர்த்து எதிர்காலத்தில் கட்சி சீறும் சிறப்புமாக இருக்க வழிவகை செய்ய வேண்டும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமி என்ன மாதிரியான முடிவெடுக்க போகிறார் என்ன அதிமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...