திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்ததற்கு, திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரமேஷ் ஆய்வு - சிக்கிய அர்ச்சகர், காவலாளிகள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் புகழ்பெற்ற முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடு அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினந்தோறும் உள்ளூர்,வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அப்படி வரும் பக்தர்கள் இலவச தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம், மாற்றுத்திறனாளிகள்/ முதியவர்கள் தரிசனம் செல்ல தனி பாதை வழியாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோயிலில் பிரதான வாயிலான சண்முக விலாச மண்டபம் வழியாக விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக கடந்த பல மாதங்களாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த திமுக ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் புதிதாக தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஒவ்வொரு கோயிலாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று மாஸ்க் அணிந்து அதிகாலையில் திருச்செந்தூர் சென்ற அமைச்சர் ரமேஷிடமே ரூ.1000 பணம் கேட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு ஒப்பந்த காவலாளிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருச்செந்தூரில் அமைச்சரிடமே லஞ்சம் கேட்ட சம்பவம் இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்
இந்த நிலையில் முன்னாள் திமுக அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் எம்.எல்.ஏ.,வுமான அனிதா ராதாகிருஷ்ணன், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் ஆய்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் திடீர் ஆய்வு என்ற பெயரில் புதியதாக பொறுப்பேற்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஐய்யங்கார் காலங்காலமாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை சார்ந்த அர்ச்சர்களை இழிவு படுத்தியது மிகவும் கண்டனத்திற்குறியதாகும்.
பல நூற்றாண்டுகளாக திருச்செந்தூர் திருக்கோயிலில் வேண்டுதலுடன் வருகின்ற பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிகாட்டுதலும் உதவியும் திருசுதந்திர அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர். பல வெளி ஊர்களிலும் வெளிமாநிலங்களிலும் பல்வேறு குடும்பங்களுக்கு கட்டளை ஐயர்களாக திருசுதந்திர அர்ச்சகர்கள் மரபுவழி பொறுப்பை நிறைவேற்றி வருகின்றனர்.
அறநிலையத் துறையை சார்ந்தவர் அல்லாத திருசுதந்திர அர்ச்சகர்கள் காலம் காலமாக மரபுவழியாக இந்த சுவாமி தரிசன உதவியை செய்து வருகின்றனர். பக்தர்கள் தரும் தட்சனையை பெறுகின்றனர். இந்த நிலையில் திருசுதந்திர அர்ச்சகர்கள் செய்யும் ஆன்மீக பணியை அமைச்சர் ரமேஷ் இழிவு படுத்தியுள்ளார்
அறநிலையத் துறை அமைச்சரின் இந்த செயல் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தினரிடம் பெரும் மன வேதனையை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதோடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் புகழை சிறுமைப்படுத்திய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்க்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.
