தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இடம் பெற்றிருந்தது. இந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றது. ஆனால் பெரும்பான்மை இல்லாமல் தவித்தது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை ஆதரவு கொடுக்க விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.
அதேசமயம் திமுக 59 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 14 இடங்களிலும் வென்றது. அந்த திமுக கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழலில் விஜய்க்கு மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தது போல தேமுதிக தெரிவிக்காது என பிரேமலதா விஜயகாந்த் அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது முதலமைச்சர் விஜயின் தவெக அரசை தாறுமாறாக விமர்சித்தார்.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்த நிலையில் தேர்தலுக்குப் பிறகு தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தை சரமாரியாக விமர்சித்துள்ளார். அவர் பேசிகையில், “எந்த பேரத்திற்கும், சோபா செட்டிற்கும், பதவிக்கும் ஆசைப்படாமல் திமுக கூட்டணியில் தொடர்வது என்ற முடிவில் தேமுதிக உறுதியாக உள்ளது என பிரேமலதா தெரிவித்தார். தேர்தலுக்கு முன், பின் என கூட்டணி மாறுவதில் தேமுதிக எப்போதும் உடன்படவில்லை. மேலும் தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் அவலங்களைப் பட்டியலிட்டால் ஒருநாள் போதாது. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. குறுகிய காலத்திலேயே மக்கள் தமிழ்நாடு முழுவதும் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்” என தெரிவித்தார்.
விஜயே என்னை தேடி வந்திருப்பார்
தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்வது பற்றி பேசிய அவர், “அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைவது தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு” சரமாரியாக விமர்சித்துள்ளார்.
மேலும் யாரை தீய சக்தி என தவெக சொன்னதோ அந்த தீய சக்தியின் ஆதரவோடுதான் ஆட்சி நடந்து வருகிறது. நாங்கள் நினைத்திருந்தால் விஜயைப் போய் பார்த்திருக்க முடியாதா?.. நான் சொல்லியிருந்தால் விஜய் என்னை தேடி வந்திருப்பார். துணை முதல்வர் பதவி வழங்கியிருப்பார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
