குதிரை பேரத்தில் தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவில்லை என ராஜினாமா செய்த தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் எடுத்த முடிவில் உடன்பாடில்லை
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், எனக்காக உழைத்த என் தொகுதி மக்களுக்கு நான் நிறைய வாக்குறுதிகளை கொடுத்திருந்தேன். அவர்களுக்கு அதனை செய்யலாம் என காத்துக் கொண்டிருந்தபோது இப்படியான ஒரு நிலைப்பாட்டிற்கு நான் வந்துள்ளேன். மக்களுக்காகவே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் முடிவை எடுத்தேன். திமுகவுடன் கூட்டணி சேர்வதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை. அதிமுகவில் கருத்து பரிமாற்றம் என்பது இல்லை. ஜெயலலிதா எல்லோரிடமும் கருத்து கேட்பார். ஆனால் இன்று எங்களுடைய கருத்துக்களை சொல்ல முடிவதில்லை" என தெரிவித்தார்.
ராஜினாமா செய்ய காரணம்?
மேலும், "நான் என்னுடைய நிலைப்பாட்டை கருதி தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேனே தவிர அவர்களிடம் எந்த உறுதி மொழியும் பெறவில்லை. நான் தமிழக வெற்றிக் கழகத்திடம் கேட்டது ஒன்றுதான். மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என சொன்னேன். இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் பேசினேன்.
தேர்தலுக்கு முன்பு திமுகவும் அதிமுகவும் மிகப்பெரிய அளவில் விமர்சனத்தை ஒருவர் மீது ஒருவர் முன்வைத்தார்கள். என்னதான் தேர்தல் பரப்புரையில் தவெக திமுக மற்றும் அதிமுகவை விமர்சித்து இருந்தாலும் அவர்களை விட தமிழக வெற்றிக் கழகம் பெரிதாக சொல்லிவிடவில்லை. முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே நல்ல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்" என சத்யபாமா கூறினார்.
குதிரைபேரம் நடந்தது உண்மையா?
அதுமட்டுமல்லாமல், குதிரை பேரம் நடந்துள்ளதாக சொல்கிறார்கள். தனிப்பட்ட முறையில் சொல்கிறேன். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி அதிமுகவில் இருந்து ஒரு ரூபாய் கூட பெறவில்லை. தாராபுரம் தொகுதியில் இருக்கும் தொழிற்சாலைகள் தொடங்கி யாரிடமும் நான் எந்தவித நன்கொடையும் பெறவில்லை. என் சொந்த பணத்தை செலவு செய்து இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றுள்ளேன். அப்படி இருக்கும்போது நான் குதிரை பேரம் அடிப்படையில் தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வேண்டும் என்பது கிடையாது. இது முழுக்க முழுக்க மக்கள் பணிக்காக எடுத்த முடிவாகும். எந்த இடத்தில் வேண்டுமானாலும் சத்தியம் செய்து என்னால் சொல்ல முடியும். தமிழக வெற்றிக் கழக ஆட்சியை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் குதிரை பேரம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தேன் என்பதை அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு என்பதை காட்டிலும் அதிமுகவில் நடைபெறும் சம்பவங்களால் அத்தகைய முடிவுக்கு நான் தள்ளப்பட்டேன். மீண்டும் நான் தேர்தலில் நின்றால் மக்கள் கண்டிப்பாக என்னை ஏற்றுக் கொள்வார்கள் என முன்னாள் எம்எல்ஏ சத்யபாமா தெரிவித்துள்ளார்.
