தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் அதனை ஒரு மாதமாகியும் திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கு சென்றாலும் தரக்குறைவாக முதலமைச்சரை பேசுவது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இதனைப் பற்றிக் காணலாம்.
தேர்தலில் தவெக வெற்றி
2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் ஜெயித்து ஆட்சியைப் பிடித்தது. பிற சிறிய கட்சிகள் ஆதரவு தர விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். கடந்த 50 ஆண்டு காலமாக திமுக மற்றும் அதிமுக என இரு திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த நிலையில் இருவரையும் ஓரம் கட்டிவிட்டு மக்கள் விஜய்க்கு தங்களுடைய ஆதரவை அளித்தனர்.
ஆனால் அரசியல் அனுபவம் இல்லாத விஜயால் தமிழ்நாடு சீரழியும், மக்களுக்கு திமுக அதிமுக அருமை புரியும் என தொடர்ச்சியாக இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் குமுறி வருகின்றனர். அதோடு சாபமிட்டும் வருகின்றனர்.
மோசமாக நடக்கும் திமுக - கொதிக்கும் மக்கள்
மேலும் முதலமைச்சர் விஜய் பெயரை சொல்லவே திமுகவினர் மறுக்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் சினிமா கவர்ச்சியால் வென்றவர், குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கியவர், எங்களுடைய தயவால்தான் இந்த ஆட்சி நீடிக்கிறது என்றெல்லாம ஆடத் தெரியாதவன் தெருக்கோணல் என்பது போல் தோல்வியை ஏற்கத் தெரியாத திமுக தவித்து வருவதோடு பல காரணங்களை அடுக்கியும் வருகிறது.
இந்த தேர்தல் முடிவுகள் நிச்சயம் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது உண்மை தான். ஆனால் வெற்றி, தோல்வி என்பது அரசியல் மட்டுமல்ல அனைத்திலும் சகஜம். தோல்வியை மனம் அவ்வளவு எளிதில் ஏற்காது. ஆனால் வெற்றி பெற்றவனை எந்நேரமும் சாடினால் கிடைத்திருக்கக் கூடிய தோல்வி வெற்றியாக மாறாது. ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என பலரும் திமுகவுக்கு அட்வைஸ் செய்கின்றனர்.
அடையாளத்தை இழக்கும் திமுக
தமிழக வெற்றிக் கழகத்தினரை நாய் என்பது, தற்குறி எனக் கூறுவது, அமைச்சரை சாதிப் பெயர் சொல்லி இழிவுபடுத்துவது போன்ற செயல்களில் எதிர்க்கட்சியாக இல்லாமல் எதிரி கட்சியாக திமுக செயல்பட்டு வருவது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. நிச்சயம் திமுக தோற்றதில் மக்களுக்கு வருத்தம் இருக்கவே செய்கிறது. ஆனால் மாற்றம் என்பது இங்கு தேவையாக உள்ளதை இரு திராவிட கட்சிகளுக்கும் மக்கள் அடித்து சொல்லியுள்ளனர்.
மேலும் ஆட்சி அதிகாரத்தை கொடுத்த மக்களை வளர்ச்சிபடுத்த வேண்டியது ஒரு அரசின் கடமையாகும். ஆனால் தாங்கள் ஏதோ பிச்சை போட்டது போல நாங்கள் செய்ததால், நீங்கள் எங்களுக்கு தான் ஓட்டு போட வேண்டும் என அதிகாரம் செய்வது மக்களுக்கு அறவே பிடிக்கவில்லை. இப்படியான செயல்களால் திமுக மற்றும் அதிமுக தங்களுடைய அடையாளத்தை இழந்து வருகிறது.
சமூக வலைதளங்களில் திமுக மற்றும் அதிமுக பொறுமை காத்து வரும் கால தேர்தல்களில் என்னென்ன மாற்றங்களை கடைபிடிக்க வேண்டும, கட்சியில் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்றெல்லாம் பலரும் பலவிதமான அறிவுரைகள் வழங்குகின்றனர். ஆனால் திமுகவினரின் ஒரே டார்கெட் தமிழக வெற்றிக் கழகத்தினரை சரமாரியாக சாடுவது மட்டும் தான் என்ற நிலை உள்ளது.
இதனை திமுக திருத்திக் கொள்ள வேண்டும். தோல்வியை ஏற்று ஒரு எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். தவறு நடக்கும் பட்சத்தில் மக்கள் விஜயாக இருந்தாலும் அடுத்த முறை புறக்கணித்து நிச்சயம் வேறு கட்சியை தேர்வு செய்வார்கள். அதே சமயம் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள விஜய்க்கு தேவையான அறிவுரைகள், செய்ய வேண்டிய விஷயங்களை நினைவுபடுத்தி மக்கள் வளர்ச்சியை தான் என்றுமே எதிர்க்கட்சிகள் நினைக்க வேண்டும். மாறாக அரசியல் பகையில் மக்களை பகடைக்காயாக பயன்படுத்த கூடாது என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
