இரட்டை வேடத்தைத் தான் எல்லா மாநிலங்களிலும் ராகுல் காந்தி நடத்தி வருவதாக திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக நீண்ட கட்டுரை ஒன்று முரசொலியில் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கூட்டணி மாற்றம்
சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தேர்தல் முடிவுக்குப் பின் தவெகவுடன் இணைந்து கொண்டது. அதேபோல் தேர்தலுக்கு முன் திமுகவிடமும், தேர்தலுக்குப் பின் தவெகவிடமும் மாநிலங்களவை உறுப்பினர் இடத்தையும் காங்கிரஸ் பெற்றுக் கொண்டது. இதனால் காங்கிரஸ் மீது திமுக கடும் அதிருப்தியில் உள்ளது. அக்கட்சி துரோகம் செய்து விட்டதாக மேடைதோறும் திமுக தலைவர்கள் முழங்கி வருகின்றனர்.
இப்படியான நிலையில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்த திமுக விலக தொடங்கியுள்ளது. அதன் எதிரொலியாக ஜூன்8ல் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தை காங்கிரஸ் பங்கேற்கிறது என்ற ஒரே காரணத்துக்காக திமுக புறக்கணித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ராகுல் காந்தியை மையப்படுத்தி கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ராகுல் கட்சியை குழிதோண்டி புதைக்கிறார்
அதன் தலையங்கத்தில், “இந்தியா கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்க காங்கிரஸ் கட்சி தான் காரணம். திமுகவுக்கு அக்கட்சி இழைத்த துரோகத்தால் தொண்டர்கள் மிகுந்த காயமடைந்துள்ளனர். ராகுலின் தன்னிச்சையான, ஆணவமான நடவடிக்கைகளும் இதன் ஒரு காரணமாகும். அவர் தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் ராகுல்காந்தி கட்சியை குழிதோண்டி புதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
பிரவீன் சக்கரவர்த்தியை எம்.பி. ஆக்குவதற்காகத்தான் ராகுல் அலைந்திருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது ஒரு கெட்ட மதியாளரைத் தூக்கிச் சுமந்தோமே என்ற வருத்தமே மிஞ்சுகிறது. கூட்டணியில் இருந்துக் கொண்டே திமுகவுக்கு குழி பறித்தார். மு.க.ஸ்டாலினை சகோதரர் என சொன்னதே நடிப்பு தான். அவர் இரட்டை வேடத்தைத் தான் எல்லா மாநிலங்களிலும் நடத்திக் காட்டி வருகிறார் ராகுல்.
கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா?
மேலும் பீகாரில் தேஜஸ்வீயை முதுகில் குத்திய காட்சியை யாரும் மறக்க முடியாது. இப்படித்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் அணைத்துக் கெடுக்கும் செயலை ராகுல் செய்து வருகிறார். அதையே தான் தமிழ்நாட்டிலும் செய்தார். இவ்வளவு நடந்த பிறகும் இந்தியா கூட்டணியில் திமுக இருக்கிறது என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் கூறுகிறார். காங்கிரஸ் கட்சி வேண்டுமானால் மான ஈனத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம். திமுகவை இனமானமும், தன்மானமும் தான் உயிர்ப்புடன் வைக்க காரணமாகும். இதனை வைத்தே முடிவுகளை திமுக எப்போதும் எடுக்கும்.
