பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி விரைவில் அரசியல் கட்சி தொடங்கப் போவதை உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் அவரின் முடிவுக்கு இளைஞர்களிடையே அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்
காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக ஜொலித்துக் கொண்டிருந்த அண்ணாமலை கடந்த 2019 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கினார். பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அவர் குறுகிய காலத்திலேயே மாநில துணைத்தலைவர், மாநிலத் தலைவர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
அதிரடியில் பெயர் போன அண்ணாமலை தமிழக பாஜகவில் தலைவராக நியமிக்கப்பட்டது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் இந்த நடவடிக்கைக்கு உட்கட்சி நிர்வாகிகள் இடையே ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது. இந்தநிலையில் 2025 ஆம் ஆண்டு அண்ணாமலை தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து தேசிய செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்த அவர் பெரிதாக அதன்பின் கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் அண்ணாமலை பெரியளவில் ஈடுபாடு காட்டாமல் செயல்பட்டு வந்தார்.
அரசியல் கட்சிக்கு அடித்தளம்
இந்த நிலையில் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளதாகவும், விரைவில் இதனை அரசியல் கட்சியாக மாற்ற உள்ளதாகவும் அறிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த முடிவுக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு அரசியல் களம் திமுக மற்றும் அதிமுக என்று இருந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. அந்த மாற்றம் தன்னாலும் செய்ய முடியும் என அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அரசியலுக்கு வரவழைத்த விஜய்
உண்மையில் அண்ணாமலை அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான முடிவை எடுத்ததற்கு மிக முக்கிய காரணமாக முதலமைச்சர் விஜய் பார்க்கப்படுகிறார். காரணம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கியது. விஜய்யின் சினிமா நட்சத்திர அந்தஸ்து மட்டும்தான் அக்கட்சிக்கு அடையாளமாக இருந்தது. வேட்பாளர் பெயர், முகம் சாதி மதம் பின்னணி என்ன என எதுவும் தெரியாமல் விஜயின் முகத்திற்காக மட்டுமே மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தனர்.
இதன் மூலம் திமுக மற்றும் அதிமுக கட்டிக் காத்து வந்த தொகுதி ரீதியான சாதி, மத வேறுபாடுகள் அனைத்தும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளது. அண்ணாமலை ஏற்கனவே தேர்தலில் நின்று தோல்வியடைந்து இருந்தாலும் கட்சி தொடங்குவதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் விஜயால் அரசியலில் நிகழ்ந்த மாற்றம் அவருக்குள் மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கியுள்ளது என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
