அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - சி.வி.சண்முகம் தரப்புக்கு ஏற்பட்டிருந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக அதிமுக ஐடி விங் தெரிவித்துள்ளது.
தேர்தல் முடிவில் வெடித்த சண்டை
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெறும் 53 இடங்களில் வெற்றி பெற்று 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. 108 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்த தவெக பெரும்பான்மை பலம் இல்லாமல் தவித்தது. இதனால் அதிமுகவில் சி.வி.சண்முகம் தலைமையிலான ஒரு தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க அவர் ஏற்க மறுத்தார்.
அதேசமயம் திமுக ஆதரவில் அதிமுக ஆட்சியமைத்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியானது. இதற்கு சி.வி.சண்முகம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இப்படியான நிலையில் மே 13ம் தேதி தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக எம்.எல்.ஏ.,க்கள்
இதில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.,க்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 எம்.எல்.ஏ.,க்கள் எதிராக வாக்களித்தனர். ஆதரவு தெரிவித்தவர்கள்,அவர்களது ஆதரவாளர்கள் கட்சி பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இதனால் டென்ஷனான சி.வி.சண்முகம் தரப்பு எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்த சூழலில் தவெகவுக்கு ஆதரவளித்த 25 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மேல் நடவடிக்கை எடுத்தால் தங்கள் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் என்ற நிலையில் சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து இபிஎஸ் உடன் கைகோர்க்க தொடங்கினர். இதற்கிடையில் இந்த அணியில் இருந்த மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய 4 பேரும் எம்.எல்.ஏ. பதவியை துறந்து தவெகவில் இணைந்து விட்டனர்.
இனியும் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் வேறு கட்சிக்கு சென்றால் நிலைமை சிக்கலாகி விடும் என்பதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, சி.வி.சண்முகம் தரப்புடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி அதில் வெற்றியும் கண்டு விட்டதாக சொல்லப்படுகிறது.
அதிமுக ஐடி விங் வெளியிட்ட பதிவு
இந்த நிலையில் அதிமுக ஐடி விங் வெளியிட்ட பதிவில், “எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் என அம்மா சொன்னார்.
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது. இனி நமக்குள் பிரிவில்லை. இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை. நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே. நாளை நமதே. தமிழ்நாடும் நமதே” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
