திருப்பரங்குன்றம் விவகாரம்.. வாயை விட்டு சிக்கிய நிர்மல்குமார்.. குவியும் கண்டனம்!

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒரு முடிவெடுக்கும் என காத்திருந்த பக்தர்களுக்கு மற்றும் இந்துத்துவா அமைப்புகளை சார்ந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

G

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
திருப்பரங்குன்றம் விவகாரம்.. வாயை விட்டு சிக்கிய நிர்மல்குமார்.. குவியும் கண்டனம்!

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு முந்தைய நடைமுறை தொடரும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரம்

கடந்த திமுக ஆட்சியில் திருப்பரங்குன்றம் பின்புறம் உள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என வெடித்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருந்தது. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு இந்த விவகாரத்தில் ஒரு முடிவெடுக்கும் என காத்திருந்த பக்தர்களுக்கு மற்றும் இந்துத்துவா அமைப்புகளை சார்ந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

தீபம் ஏற்றுவதில் உண்டான பிரச்னை

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பின்புறம் உள்ள மலையின் உச்சியின் ஒருபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும், மறுபுறத்தில் தர்காவும் உள்ளது. இந்த இரண்டு வழிபாட்டு தலங்களுக்கும் பல்வேறு தரப்பு மக்கள் வந்து செல்லும் நிலையில் மலை மேல் இருக்கும் விநாயகர் கோயிலில் கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றுவது வழக்கமாக இருந்து வந்தது.

ஆனால் கோயிலின் மலை உச்சியில் இருக்கும் கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தியது. 2025ம் ஆண்டு தீபத்திருநாளில் இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

முயற்சியை தடுத்த திமுக

தீபம் ஏற்ற வேண்டும் என கூறப்படும் தீபத்தூண் தர்காவுக்கு மிக அருகில் இருப்பதால் அங்கு மத நல்லிணக்க பிரச்சனை உண்டாகலாம் என முந்தைய திமுக அரசு கருதி அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டு தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி நீதிமன்ற தீர்ப்பை அப்போதைய திமுக அரசு செய்ய மறுத்துவிட்டது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது அப்போது தீபம் ஏற்றும் உத்தரவை அரசு நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மேலும் ஜனநாயக நாட்டில் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இது குறித்து மாநில அரசு தங்களது இறுதி முடிவை ஜூன் 22 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

நிர்மல் குமார் பதில் - குவியும் கண்டம்

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் கூட முழுதாக முடியாத நிலையில் அரசுக்கு பெரும் தலைவலியாக இந்த விவகாரம் அமைந்துள்ளது. இந்த நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரும், திருப்பரங்குன்றம் எம்எல்ஏவுமான சி.டி.ஆர். நிர்மல் குமார் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நடைமுறையே தொடரும். அதனைத் தான் மக்களும் விரும்புகிறார்கள் எந்த மத வாத சக்தியும் தமிழ்நாட்டிற்குள் புகுந்து அரசியல் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.

இதற்கு பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பைச் சார்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள பதிவில், “திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்த கருத்து தான்தோன்றித்தனமாக இருப்பதாக விமர்சித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது தூய சக்தி என்று மேடைக்கு மேடை வாய் அளந்து விட்டு ஆட்சி பொறுப்பேற்றும் தீய சக்தி திமுகவின் இந்து விரோத கருத்தையே எதிரொலிப்பது தான் மாற்று சக்தியாக கூறிய தவெகவின் லட்சணமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வெற்றிக்கழகமும் திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோரும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...