திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்ததாக வெளியான தகவலுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முருகன் கோயில்களில் வைகாசி விசாக திருவிழா
முருகப்பெருமான் பிறந்த தினமாக கருதப்படும் வைகாசி விசாக திருவிழா உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் வெகுவிமரிசையாக இன்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அறுபடை வீடுகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பலரும் பால்குடம், முடி காணிக்கை உள்ளிட்ட பல நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், இதில் 87 பேர் மயங்கி விழுந்ததாகவும் ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை என திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது. ஒருவர் மட்டுமே இரத்த அழுத்தம் காரணமாக மயக்கமடைந்தார் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.
தவெக அரசின் அலட்சியம் - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு
இந்த நிலையில் மக்கள் கூடும் கோயில் விழாக்களில் தவெக அலட்சியம் என தலைப்பிட்டு பாஜக மூத்த தலைவர் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இன்று திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழாவில் கலந்து கொள்ளக் குவிந்த பக்தர்களில் 87க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்திருப்பதும், இன்னும் சிலர் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்திருப்பதும் கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஏராளமான முருகபக்தர்கள் கூடுவார்கள் என முன்கூட்டியே தெரிந்தும் அப்பகுதியில் அதற்கான முறையான ஏற்பாடுகளை செய்யாத தவெக அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இது மட்டுமின்றி, அங்கு அபிஷேகம் செய்யப்படும் பால் சாக்கடையில் கலந்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பக்தர்களுக்கான குடிநீர் ஏற்பாடுகளைக் கூட கோவில் நிர்வாகமோ, ஆட்சியாளர்களோ செய்யாமல் கோட்டை விட்டதாக பக்தர்கள் கொந்தளித்தனர்.
ஏற்கனவே திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரத்தில், பக்தர்களை தவிக்க வைத்த திமுகவை தமிழக மக்கள் கடுமையாக புறக்கணித்து தண்டித்தது தவெகவுக்கு நினைவில் இருக்கட்டும். மக்கள் அதிகமாய்க் கூடும் இடங்களில் மக்களை பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நடப்பு அரசுக்குத்தான் உள்ளது.
வாய் திறக்காத முதலமைச்சர் ஜோசப் விஜய்
கரூர் கூட்ட நெரிசல் பலிகளுக்கு தங்களுக்கு எந்த ஒரு பொறுப்புமில்லை என அன்றைய திராவிட மாடலை கை காட்டி தப்பித்துக் கொண்ட முதல்வர் விஜய் இன்று நடந்துள்ள இந்த அலட்சிய அசம்பாவிதத்திற்கு யார் மீது குற்றம் சுமத்தப் போகிறார்? குருவி தலையில் பனங்காய் என்பது போல தத்தக்கா பித்தக்கா என ஆட்சி நடத்தாமல், உருப்படியாக பொறுப்புணர்ந்து தவெக அரசு செயல்பட வேண்டியது அவசியம்.
மேலும், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இது போன்ற திருவிழா சமயங்களில் ஏன் கள ஆய்வுக்கு வருவதில்லை? பக்தர்கள் கூட்டத்தில் சிக்கி விடுவோம் எனும் அச்சமா? முதல்வர் தான் எந்த ஒரு கேள்விக்கும் பதில் தர மாட்டார்…அட்லீஸ்ட் அமைச்சராவது வாய் திறப்பாரா?” என சரமாரியாக விமர்சித்துள்ளார்.