தியேட்டர்களில் படம் திரையிடுதல் தொடர்பாக விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதற்கு திரைத்துறையில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றுள்ளது. சினிமா துறையில் முன்னணி நடிகராக இருந்து அரசியலில் பெரும் புரட்சி செய்த விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இந்த சூழலில் தமிழ்நாடு அரசு கடந்த மே 25ஆம் தேதி 1957-ஆம் ஆண்டின் தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறை விதிகளைத் திருத்தியமைத்தது. இதன்படி, புதிதாக வெளியாகும் திரைப்படங்கள், வெளியான நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு, தினமும் ஐந்து காட்சிகள் வரை திரையிட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. முன்னதாக இதற்கு ஒவ்வொரு வாரமும் அனுமதி வாங்க வேண்டிய சூழல் நிலவி வந்தது.
இதனிடையே முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் இந்த முடிவு திரையுலகில் ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. முன்னதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள், கடந்த மே 16 ஆம் தேதி முதலமைச்சரைச் சந்தித்தனர். அப்போது கேளிக்கை வரிகள், குறைந்த பட்ஜெட் படங்களுக்கான மானியங்கள் மற்றும் திரையரங்கு சீர்திருத்தங்கள் போன்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த விஜய், பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களைத் தவிர, புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் ஒரு வாரத்திற்கு, தினமும் ஐந்து காட்சிகள் வரை, அரசின் சிறப்பு அனுமதி இல்லாமல் திரையிடலாம் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சிறப்பு காட்சி திரையிடல் கோரிக்கை எங்கள் அமைப்பால் அரசிடம் முன்வைக்கப்பட்டது என்றாலும் இதை நாங்கள் ஒரு பெரிய அறிவிப்பு என்று கூற மாட்டோம் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், கூறியுள்ளார்.
மேலும், "தமிழ்நாடு முழுவதும் 24 மணி நேரமும் அனுமதி அளிக்க வேண்டும் என நாங்கள் கோரினோம். காரணம் நாள் முழுவதும் மக்கள் தியேட்டரில் இருந்தால் மின்சாரக் கட்டணம் செலுத்துவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மேலும், கேளிக்கை வரியை ரத்து செய்யும் அறிவிப்பையும் நாங்கள் எதிர்பார்த்தோம். அது வந்திருந்தால் எங்களுக்கு ஒரு பெரிய நிம்மதியாக இருந்திருக்கும். எனினும் இந்த சிறப்பு காட்சி அனுமதி பெரிய நட்சத்திரத்தின் படங்களுக்கு மட்டுமே பயனளிக்கும், குறைந்த பட்ஜெட் படங்களுக்கு அல்ல என திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
அதேசமயம், விரைவில் வெளியாகவுள்ள ஒரு படத்தின் பெயர் குறிப்பிடாத தயாரிப்பாளர் கூறுகையில், அரசின் இந்த அறிவிப்பு ஒரு ஊக்கமளிக்கும் விஷயம் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு நாளைக்கு ஒரு தியேட்டருக்கு ஒரு கூடுதல் காட்சி என்றால், ஒரு நாளைக்கு 1,000 கூடுதல் காட்சிகள் மற்றும் ஒரு வாரத்திற்கு 7,000 காட்சிகள் என்று பொருள். இது திரையரங்குகளுக்குப் பயனளிக்கும். திரையரங்குகள் சிறப்பாகச் செயல்படும்போது அது தயாரிப்பாளர்களுக்கும் பயனளிக்கிறது என அவர் கூறினார்.
அதுமட்டுமல்லாமல் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் விற்பனை மந்தமாக உள்ள நிலையில் திரையரங்கு வருவாய் தான் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுகிறது, குறிப்பாக நடுத்தர பட்ஜெட்டில் உருவாகும் படங்களைத் தயாரிப்பவர்கள் வரவேற்கும் ஒரு முடிவாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
