AIADMK | அதிமுகவிலிருந்து விலகும் விஜயபாஸ்கர்? - வெல்லமண்டி நடராஜன் விடுத்த ட்விஸ்டால் பரபரப்பு!

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி, சி.வி.சண்முகம் தலைமையிலான மற்றொரு அணி என பிளவுபட்டிருந்த நிலையில் எம்எல்ஏக்கள் கட்சித் தாவியதால் கட்சியை மீண்டும் சுமுகமாக கொண்டு செல்லும் வண்ணம் எடப்பாடி பழனிசாமி தரப்பு சி.வி. சண்முகம் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

G

எழுதியவர்

1 நாட்களுக்கு முன்
AIADMK | அதிமுகவிலிருந்து விலகும் விஜயபாஸ்கர்? - வெல்லமண்டி நடராஜன் விடுத்த ட்விஸ்டால் பரபரப்பு!

அதிமுகவில் இருந்து சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட சரிவு

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 53 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து பெரும்பான்மை இல்லாமல் தவித்த தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு கொடுத்த அதிமுகவில் ஒரு தரப்பு எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனால் அதனை மறுத்த எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெக அரசை எதிர்த்து வாக்கை செலுத்தினார். 47 எம்எல்ஏக்கள் கொண்ட அதிமுகவில் 25 பேர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

சூழலை சமாளித்த எடப்பாடி பழனிசாமி

இதனால் அதிமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. இந்த சூழலில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்த மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகிய நான்கு பேரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி, சி.வி.சண்முகம் தலைமையிலான மற்றொரு அணி என பிளவுபட்டிருந்த நிலையில் எம்எல்ஏக்கள் கட்சித் தாவியதால் கட்சியை மீண்டும் சுமுகமாக கொண்டு செல்லும் வண்ணம் எடப்பாடி பழனிசாமி தரப்பு சி.வி. சண்முகம் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சுமுகமான முடிவு எட்டப்பட்ட நிலையில் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் தவிர மற்ற எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி உடன் அனுசரித்து செல்ல முடிவு செய்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அடங்காத சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி சமாதானம்

இந்த சூழலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி தனக்கு எதிராக குரல் கொடுத்ததால் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியதால் அதனை ஏற்க மறுத்த சி.வி.சண்முகம் அதற்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு இருக்கத் தயார் என்ற ரீதியில் செயல்பட்டு வருவதாகவும், அவரை எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் சமாதானப்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுகவில் நீடிப்பதா அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதா அல்லது அரசியலில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறுவதால் என தனது ஆதரவாளர்களிடம் கருத்து கேட்டுள்ளார். விரைவில் அவர் இது தொடர்பாக முடிவு எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெல்லமண்டி நடராஜன் வைத்த ட்விஸ்ட்

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அதிமுக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சி.வி.சண்முகம் மற்றும் மற்றொரு முக்கிய நபர் அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என சூசகமாகத் தெரிவித்தார். இதனால் விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...