சென்னை பசுமைவழிச் சாலையில் இருக்கும் அரசு பங்களாவில் வசித்து வந்த எடப்பாடி பழனிசாமி அந்த வீட்டை காலி செய்து வேறு இடத்தில் குடியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2011 முதல் 2026 வரை
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. அதேசமயம் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக அதிமுக இருந்தது. ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என 3 முதலமைச்சர்கள் அந்த ஆட்சி காலத்தில் பதவி வகிக்கும் சூழல் ஏற்பட்டது. 2021 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்தது. அதிமுக எதிர்க்கட்சியாக மாறியது. இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தேறியுள்ளது.
அரசு வீட்டை காலி செய்த எடப்பாடி பழனிசாமி
இதனிடையே சென்னை அடையாறில் உள்ள பசுமைவழிச் சாலையில் தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், நீதிபதிகள் உள்ளிட்ட பெரிய பொறுப்பு வகிப்பவர்களுக்கு அரசு இல்லம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை எடப்பாடி பழனிசாமி அரசு இல்லத்தில் வசித்து வந்தார். அதன் பிறகு 2021 முதல் 2026 வரை எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்ட காலகட்டத்திலும் அவருக்கான அரசு இல்லத்தில் தங்கி பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவராக திமுகவின் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு இல்லத்தை எடப்பாடி பழனிசாமி காலி செய்துள்ளார்.
புது வீடு எங்குள்ளது?
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ராயப்பேட்டையில் அதிமுகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலையில் புதிய வீடு ஒன்று குடியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேலத்தில் உள்ள தனது சொந்த வீட்டில் வசித்து வரும் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தனது பணிகளை மேற்கொள்வதற்கு தொடர்ந்து அரசு இல்லத்தில் தான் தங்கி வந்தார். இந்த நிலையில் புது வீட்டில் இன்று பால் காய்ச்சும் வைபவம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
