நடைபெற்று முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், தனது அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சன் 'தொடர் நாயகன்' விருதினைத் தட்டிச் சென்றுள்ளார். இந்தத் தொடரில் மொத்தம் 5 போட்டிகளில் விளையாடிய அவர், 27 பவுண்டரிகள் மற்றும் 24 சிக்ஸர்களுடன் 321 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார். குறிப்பாக, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 97 ரன்களும், அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 89 ரன்களும் விளாசிய அவர், நியூஸிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அதே 89 ரன்களை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய சஞ்சு சாம்சன், தனது இந்தப் பயணத்தில் சந்தித்த சவால்கள் மற்றும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அளித்த ஆலோசனைகள் குறித்து மனம் திறந்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரின் போது களமிறங்க வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்திருந்தபோது, சச்சினிடம் நீண்ட நேரம் பேசியதாகவும், அவரிடமிருந்து கிடைத்த நுணுக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்களே தன்னை மனரீதியாகத் தயார் செய்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 2024 உலகக் கோப்பை அணியில் இருந்தும் ஒரு போட்டியில் கூட விளையாடாத ஏமாற்றம் இருந்தபோதிலும், தனது கனவை கைவிடாமல் உழைத்ததாகவும், நியூஸிலாந்து தொடருக்குப் பிறகு சோர்ந்து போயிருந்த தனக்குக் கடவுள் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். தனது தேசத்திற்காக முக்கிய ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி தேடித்தந்தது மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த அவர், தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
