உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பெயினின் இரண்டாம் டிவிஷன் கிளப்பான 'அல்மேரியா' (Almeria) அணியின் பங்குகளை வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி அரேபிய உரிமையாளரின் கீழ் இயங்கும் இந்த கிளப்பின் 25 சதவீத பங்குகளை ரொனால்டோ கைப்பற்றியுள்ளார். தற்போது 41 வயதாகும் ரொனால்டோ, 2022 முதல் சவுதி அரேபியாவின் அல்-நசர் அணிக்காக விளையாடி வரும் நிலையில், தனது 'CR7 ஸ்போர்ட்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ்' நிறுவனம் மூலம் இந்த முதலீட்டை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்துப் பேசிய ரொனால்டோ, கால்பந்து மைதானத்தைத் தாண்டி அந்த விளையாட்டிற்குத் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது நீண்ட கால லட்சியம் என்றும், வலுவான அடித்தளம் கொண்ட அல்மேரியா கிளப் வளர்ச்சிக்கான சிறந்த வாய்ப்புகளைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு முகமது அல்-கெரீஜி இந்த கிளப்பை வாங்கிய நிலையில், தற்போது ரொனால்டோவின் வருகை அந்த அணிக்குக் கூடுதல் பலத்தை அளித்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரர் தங்கள் கிளப்பில் முதலீடு செய்திருப்பது தங்களுக்குப் பெருமிதம் அளிப்பதாக அதன் உரிமையாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
