கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்திற்கு வெளியே நடைபெற்ற கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நிரந்தர இருக்கைகள் மற்றும் நினைவுப்பலகை
உயிரிழந்த அந்த 11 ரசிகர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக, சின்னசாமி மைதானத்தில் 11 நிரந்தர இருக்கைகள் மற்றும் ஒரு நினைவுப்பலகை அமைக்கப்படும் என்று ஆர்சிபி நிர்வாகமும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கமும் (KSCA) இணைந்து அறிவித்துள்ளன. இந்த 11 இருக்கைகளும் ஐபிஎல் போட்டிகளுக்கோ அல்லது சர்வதேசப் போட்டிகளுக்கோ ஒருபோதும் விற்பனை செய்யப்படாது; அவை அந்த ரசிகர்களின் நினைவாக எப்போதும் காலியாகவே விடப்படும். மேலும், மைதானத்தின் நுழைவுவாயில் அருகே அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் நினைவுப்பலகை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
நிர்வாகத்தின் விளக்கம்
இந்தத் திட்டத்தைக் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத் தலைவரும், முன்னாள் இந்திய வீரருமான வெங்கடேஷ் பிரசாத் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "அந்தத் துயரமான சம்பவத்தை நினைப்பதே வேதனையாக உள்ளது. உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றுவது எங்களின் கடமை," எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சீசனில் ஆர்சிபி வீரர்கள் பயிற்சியின் போது 11-ஆம் எண் இட்ட ஜெர்சியை அணிந்து அவர்களுக்கு மரியாதை செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நிமிட மௌன அஞ்சலி
2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 28-ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆர்சிபி அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக, உயிரிழந்த 11 ரசிகர்களுக்கும் மைதானத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. மைதானத்தின் பாதுகாப்பு வசதிகளுக்காக சுமார் 7 கோடி ரூபாய் செலவில் நவீன ஏஐ (AI) தொழில்நுட்பக் கேமராக்கள் உள்ளிட்ட பல மாற்றங்களை ஆர்சிபி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
