உலக விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் அணிகளை கௌரவிக்கும் "லாரியஸ் விருது" வழங்கும் விழா ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.
சிறந்த வீரர்
இந்த விழாவில், ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திரமான கார்லஸ் அல்காரஸ் ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் மற்றும் அமெரிக்கா ஓபன் போட்டிகளிலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியன் ஓபன் தொடரிலும் அவர் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் பல முக்கிய பட்டங்களை வென்றதுடன், உலக தரவரிசையில் முன்னணி இடத்தைத் தக்கவைத்திருப்பதும் அவரது தேர்வுக்கு காரணமாக அமைந்தது.
சிறந்த வீராங்கனை
பெண்கள் பிரிவில், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா ஆண்டின் சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றதுடன், தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக திகழும் சபலென்காவின் நிலைத்தன்மையும் ஆட்டத் திறனும் இந்த விருதை அவருக்கு பெற்றுத்தந்தன.
சிறந்த அணி
அணிகள் பிரிவில், பிரான்ஸ் கால்பந்து கிளப் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் ஆண்டின் சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது இந்த அணிக்கு வரலாற்றுச் சாதனையாகும்.
உலகளவில் மிக முக்கியமான விளையாட்டு விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் லாரியஸ் விருதுகள், ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் அணிகளை கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டின் விழாவும் உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
