உலகின் முன்னணி ஜூனியர் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் 16 வயதான மாயா தனது சிறப்பான ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இறுதிப்போட்டியில் மாயா, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 15 வயது வீராங்கனை பாவோலா பினோராவை எதிர்கொண்டார். தொடக்கத்தில் கடுமையான போட்டி நிலவிய நிலையில், முதல் செட்டை மாயா 4-6 என்ற கணக்கில் இழந்தார்.
இரண்டாவது செட்டிலும் 3-5 என பின்தங்கி தோல்வியின் விளிம்பில் இருந்த அவர், அசத்தலான மீள்வரவு செய்து தொடர்ந்து நான்கு கேம்களை கைப்பற்றி 7-5 என செட்டை கைப்பற்றினார்.
மூன்றாவது மற்றும் தீர்மானிக்கும் செட்டில் மாயா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மொத்தமாக 2 மணி நேரம் 50 நிமிடங்கள் நீண்ட இந்த ஆட்டத்தில் மாயா 4-6, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த வெற்றி, 2026ஆம் ஆண்டில் மாயா வென்ற முதல் ஐடிஎப் பட்டமாகும். இந்த சாதனையின் மூலம் மாயா ரேவதி முதன்முறையாக உலக ஜூனியர் தரவரிசையில் டாப் 30 பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இந்த வெற்றி, இந்திய டென்னிஸில் புதிய நம்பிக்கையை உருவாக்குவதோடு, மாயாவின் எதிர்காலம் குறித்து பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
