நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியை முன்னிட்டு, ரசிகர்களுக்காக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மற்றும் சிஎஸ்கே லிமிடெட் இணைந்து சிறப்பு சலுகையை அறிவித்துள்ளன. இதன்படி, போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம்.
இந்த சலுகையின் கீழ், ரசிகர்கள் தங்களிடம் உள்ள மின்னணு (e-ticket) அல்லது அச்சு டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள QR குறியீட்டை மெட்ரோ நிலைய நுழைவாயிலில் ஸ்கேன் செய்து பயணிக்க அனுமதிக்கப்படுவர். இதன் மூலம், இருமுறை நுழைவு மற்றும் இருமுறை வெளியேறும் வசதி இலவசமாக வழங்கப்படும்.
மெட்ரோ பயணம் தொடர்பாக, அரசினர் தோட்டம் மெட்ரோ அருகில் உள்ள சேப்பாக்கம் மைதானத்திற்குச் செல்லும் ரசிகர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவிகரமாக இருக்கும். சென்னை மெட்ரோவின் எந்த நிலையத்திலிருந்தும் இந்த நிலையம் வரை சென்று திரும்பும் பயணம் இந்த சலுகைக்குள் அடங்கும்.
போட்டி முடிந்த பின்னர் ரசிகர்கள் எளிதாக வீடு திரும்பும் வகையில், மெட்ரோ சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலைய மெட்ரோ போன்ற முக்கிய நிலையங்களுக்கு செல்லும் கடைசி ரயில் நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரசிகர்கள் கடைசி ரயிலை தவறவிடாமல் இருக்க, குறைந்தது 10 நிமிடங்களுக்கு முன்பாக நிலையத்திற்குள் நுழைய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம், ரசிகர்கள் பாதுகாப்பாகவும் சுலபமாகவும் போட்டியை காண சென்று திரும்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
