மார்ச் 28-ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுமார் 15,290 கோடி ரூபாய்க்கு கல் சோமானி (Kal Somani) குழுமத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி விற்பனை செய்யப்பட்ட மிக உயர்ந்த மதிப்பாகும்.
கடும் போட்டி
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் சென்னை, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் அணியின் தற்போதைய உரிமையாளர் மனோஜ் பதாலே, அணியின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்கத் தொழிலதிபர் கல் சோமானி தலைமையிலான குழுமம், டைம்ஸ் இன்டர்நெட், ஆதித்ய பிர்லா குழுமம் மற்றும் மிட்டல் குழுமம் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இந்த அணியை வாங்குவதற்கான போட்டியில் களமிறங்கின.
வரலாற்றுச் சாதனை ஒப்பந்தம்
இறுதியில், கல் சோமானி குழுமம் அதிகபட்சமாக 15,290 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியைக் கைப்பற்றியது. இந்த மெகா ஒப்பந்தத்தில் வால்மார்ட் (Walmart) நிறுவனத்தின் ராப் வால்டன் உள்ளிட்ட முன்னணி முதலீட்டாளர்கள் பங்குதாரர்களாக இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் நிர்வாகம் விளக்கம்
இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் தெரிவிக்கையில், "கல் சோமானி குழுமம் ஏற்கனவே ராஜஸ்தான் அணியில் முதலீடு செய்திருந்தது. தற்போது அந்த அணியை முழுமையாக வாங்கியுள்ளது. இவ்வளவு பெரிய மதிப்பிலான விற்பனை, ஐபிஎல் தொடரின் உலகளாவிய வர்த்தக மதிப்பையும் அதன் வளர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது" எனக் கூறியுள்ளது.
லக்னோ அணியை முந்தியது
இதற்கு முன்னதாக, கடந்த 2021-ஆம் ஆண்டு லக்னோ அணி 7,090 கோடி ரூபாய்க்கு விற்பனையானதே சாதனையாக இருந்தது. தற்போது அதனை விட இரண்டு மடங்கு அதிக விலைக்கு ராஜஸ்தான் அணி விற்பனையாகி இருப்பதால், ஐபிஎல் வரலாற்றில் மிக உயர்ந்த மதிப்புள்ள அணியாக இது உருவெடுத்துள்ளது. இந்த ஒப்பந்தம் பிசிசிஐ (BCCI) முறையான அனுமதி அளித்த பிறகு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
