2026-க்கான ஐபிஎல் தொடர் மார்ச் 28ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் 70 லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆஃப் சுற்றுகள் இடம்பெறுகின்றன. இதுவரை 49 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.
தற்போதைய விதிமுறைகளின்படி, ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள அணிகளுடன் மற்றும் எதிர் பிரிவில் உள்ள அணிகளுடன் மொத்தம் 14 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், பிளே ஆஃப் சுற்று மற்றும் இறுதிப்போட்டிக்கான மைதானங்களை நிர்வாகம் அறிவித்துள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும் பிளே ஆஃப் சுற்று-1 போட்டி மே 26ஆம் தேதி தரம்சாலா HPCA மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
அதேபோல், புள்ளிப்பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெறும் அணிகள் மோதும் எலிமினேட்டர் போட்டி மே 27ஆம் தேதி சண்டிகர் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிளே ஆஃப் சுற்று-2 போட்டியும் அதே மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த சீசனின் மிக முக்கியமான இறுதிப்போட்டி மே 31ஆம் தேதி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அஹமகாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஐபிஎல் 2026 தொடரின் இறுதிக்கட்டப் போட்டிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
