நார்வே செஸ் 2026 தொடரின் 8ஆவது சுற்று ஆட்டங்கள் ஓஸ்லோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதில் இந்திய கிராண்ட்மாஸ்டரான 20 வயது பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு, உலகத் தரம் வாய்ந்த நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இத்தொடரில் இரண்டாவது முறையாக வீழ்த்தி அசுர சாதனை படைத்துள்ளார். முன்னதாக வெள்ளை நிற காய்களுடன் விளையாடி கார்ல்சனை வீழ்த்தியிருந்த பிரக்ஞானந்தா, இந்த 8ஆவது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடி மீண்டும் அவரை நிலைகுலையச் செய்தார். இதன் மூலம், ஒரே தொடரில் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்திற்கு அடுத்தபடியான இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். மேலும், கிளாசிக்கல் செஸ் போட்டிகளில் கார்ல்சனை மூன்று முறை வென்ற உயரடுக்கு (Elite) வீரர்கள் பட்டியலிலும் அவர் இணைந்துள்ளார்.
நேர்காணலில் பிரக்ஞானந்தா ஓப்பனிங்
போட்டிக்கு கடுமையான நேர நெருக்கடியில் இருந்த கார்ல்சன் செய்த தவறான நகர்த்தலைச் சாதகமாக்கிக் கொண்டு பிரக்ஞானந்தா இந்த வெற்றியைப் பதிவு செய்தார். போட்டிக்குப் பிறகு பேசிய அவர், "எந்த வடிவத்தில் கார்ல்சனை வென்றாலும் அது சிறப்பானதுதான். ஆனால், அதைவிடத் தொடரின் இந்தத் தீர்க்கமான கட்டத்தில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது" என்றார். கார்ல்சனின் ஆதிக்கம் குறைகிறதா என்ற கேள்விக்கு, "இது வெறும் ஒரே ஒரு தொடர்தான், இதில் சில தருணங்கள் அவருக்குச் சாதகமாக அமையவில்லை. அவர் எப்போதும் சிறந்த வீரர்தான்" என்று மறுத்தார். மேலும், கார்ல்சனைப் பார்த்து தான் எப்போதுமே பயந்ததில்லை என்றும், அவருடன் விளையாடுவது எப்போதும் எனக்குள் உற்சாகத்தைத் தூண்டி எனது சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரும் என்றும் கூறினார். தலைமுறை மாற்றம் குறித்துப் பேசுகையில், "நாங்கள் ஏற்கனவே உலகின் சிறந்த வீரர்களுடன் முன்னணியில் இருக்கிறோம். எனவே தலைமுறை மாற்றம் என்ற பேச்செல்லாம் வெறும் மிகைப்படுத்தல்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
உலக சாம்பியன் குகேஷிற்குத் தோல்வி
மற்றொரு முக்கியமான கிளாசிக்கல் ஆட்டத்தில், உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் தொம்மராஜுவை எதிர்கொண்ட அலிரேசா பிரோஸ்ஜா அபார வெற்றி பெற்றார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரோஸ்ஜா, இறுதி ஆட்டத்தின் கடுமையான நேர நெருக்கடியிலும் தனது நிதானத்தை இழக்காமல் குகேஷை வீழ்த்தி முழு புள்ளிகளையும் வாரிக் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் அவர் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் வெஸ்லி சோவை விட ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளார்.
புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் வெஸ்லி சோ
இச்சுற்றின் மூன்றாவது கிளாசிக்கல் ஆட்டத்தில் வெஸ்லி சோ மற்றும் வின்சென்ட் கெய்மர் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. இருப்பினும், அதைத் தொடர்ந்து நடந்த 'அர்மகெடான்' (Armageddon) டை-பிரேக் ஆட்டத்தில் வெஸ்லி சோ வெற்றி பெற்று கூடுதல் புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். 8ஆவது சுற்றின் முடிவில், வெஸ்லி சோ 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அலிரேசா பிரோஸ்ஜா 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் நீடிக்கின்றனர். சொந்த மண்ணில் விளையாடி வரும் கார்ல்சன் இந்தத் தொடரில் 4 கிளாசிக்கல் தோல்விகளைச் சந்தித்து தவித்து வருவது இந்தத் தொடரின் முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது.
பெண்கள் பிரிவிலும் அசாபயேவா அதிரடி
நார்வே செஸ் பெண்கள் பிரிவிலும் 8ஆவது சுற்று ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்தது. தொடரின் முன்னிலையில் இருக்கும் பிபிசரா அசாபயேவா, இந்தியாவின் திவ்யா தேஷ்முக்கை எதிர்கொண்டு கருப்பு நிற காய்களுடன் விளையாடி வெற்றி பெற்றார். திவ்யா சந்தித்த நேர நெருக்கடியைப் பயன்படுத்தி அசாபயேவா முழு புள்ளிகளையும் தட்டிச் சென்றார். மற்றொரு ஆட்டத்தில் சூ ஜினெர், தற்போதைய உலக சாம்பியனான ஜு வென்ஜுனை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். அன்னா முசிசுக் மற்றும் இந்தியாவின் ஹம்பி கோனேரு இடையேயான கிளாசிக்கல் ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில், அடுத்து நடந்த அர்மகெடான் ஆட்டத்தில் ஹம்பி கோனேரு கருப்பு நிற காய்களுடன் விளையாடி அதிரடி வெற்றி பெற்றார். தற்போது பெண்கள் பிரிவில் அசாபயேவா 15.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அன்னா முசிசுக் (10.5) இரண்டாமிடத்திலும், திவ்யா தேஷ்முக் மற்றும் சூ ஜினெர் தலா 10 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.
