2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில், தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த மோசமான தோல்விக்குப்பிறகு இந்திய அணி தற்போது ஜிம்பாப்வேயை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. அரையிறுதி கனவை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தப் போட்டியில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இந்த இக்கட்டான சூழலில், இளம் வீரர் அபிஷேக் சர்மாவின் மோசமான ஃபார்ம் அணிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றிய அவர், தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 100 நிமிடங்கள் வரை தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். குறிப்பாக ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்ளத் தனி கவனம் செலுத்திய அவர், பயிற்சியின் இறுதியில் ஆகாயமே எல்லை என்பது போல சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.
அணியில் அதிரடி மாற்றங்கள் மற்றும் ரிங்கு சிங்கின் வெளியேற்றம்
ஜிம்பாப்வேக்கு எதிரான இந்த முக்கிய ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது தந்தையின் உடல்நலக்குறைவு காரணமாக அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் உலகக்கோப்பை தொடரிலிருந்து பாதியிலேயே விலகியுள்ளார்.
இது இந்திய அணிக்கு பின்னடைவாகக் கருதப்பட்டாலும், அவருக்குப் பதிலாக மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன் களம் காண அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. அதேபோல், பந்துவீச்சில் போதிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிய வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக, அனுபவ வீரர் அக்ஷர் படேலை அணியில் சேர்க்க நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
சூர்யகுமார் யாதவின் மெகா பிளான்
உலகின் நம்பர் ஒன் டி20 வீரரான சூர்யகுமார் யாதவ், இந்தத் தொடரில் இதுவரை தனது முழு வீச்சை வெளிப்படுத்தவில்லை. இதனை ஈடுகட்டும் வகையில், சேப்பாக்கத்தின் சுட்டெரிக்கும் வெயிலிலும் இரண்டு மணி நேரம் இடைவிடாது வலைப்பயிற்சியில் ஈடுபட்டு பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஒரு இமாலய இன்னிங்ஸை விளையாடி, தனது அதிரடி ஆட்டத்தை மீண்டும் உலகுக்கு நிரூபிக்க அவர் தீவிர முனைப்புடன் உள்ளார். ஒருபுறம் சீனியர் வீரர்களின் பலம், மறுபுறம் ஃபார்முக்கு திரும்பத் துடிக்கும் இளைஞர்கள் என இந்திய அணி தற்போது முழு வீச்சில் தயாராகி வருவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
