கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (மார்ச் 1) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சூப்பர்-8 சுற்றின் வாழ்வா சாவா போராட்டத்தில், இந்திய அணி மேற்கிந்திய தீவுகளை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது. இந்திய தரப்பில் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
சஞ்சு சாம்சனின் 'ருத்ரதாண்டவம்'
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியாவிற்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆனால், மூன்றாவது வீரராக களம் புகுந்த சஞ்சு சாம்சன், மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்தார். சூரியகுமார் மற்றும் திலக் வர்மாவுடன் இணைந்து நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடிய சஞ்சு, 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.
கோலியின் சாதனை தகர்ப்பு
ஆட்டத்தின் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சஞ்சு சாம்சன் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து 19.2 ஓவர்களிலேயே இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்த இன்னிங்ஸ் மூலம், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் சேஸிங்கின் போது அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்துப் புதிய சரித்திரம் படைத்தார். இந்த 5 விக்கெட் வித்தியாச வெற்றியின் மூலம் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய அணி, வரும் மார்ச் 5-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
