மகளிர் கிரிக்கெட்டின் மிக முக்கியமான தொடராகக் கருதப்படும் ஐசிசி (ICC) மகளிர் டி20 உலகக்கோப்பை 2026 போட்டிக்கான பரிசுத்தொகையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தத் தொடருக்கான மொத்த பரிசுத்தொகை இந்திய மதிப்பில் சுமார் 73 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய சீசனை விடச் சுமார் 10 சதவீதம் அதிகமாகும். இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 19.42 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது. இரண்டாம் இடம் பிடிக்கும் (Runner-up) அணிக்கு 9.71 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும், அரையிறுதிக்குத் தகுதி பெறும் அணிகளுக்குத் தலா 5.60 கோடி ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் தொடக்க ஆட்டம் ஜூன் 12-ஆம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதுகின்றன.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்க அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி முதன்முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத்தொகை உயர்வு, மகளிர் கிரிக்கெட்டின் அசுர வளர்ச்சியையும் உலகளாவிய ஆதரவையும் பிரதிபலிப்பதாகக் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
