ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான 63-வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அரங்கேறிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியில் அதிரடி காட்டிய டெவால்ட் பிரெவிஸ் 27 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 44 ரன்கள் விளாசினார். அவருக்கு அடுத்தபடியாக கார்த்திக் சர்மா 32 ரன்களும், சஞ்சு சாம்சன் 27 ரன்களும் எடுத்து பங்களித்தனர். ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் மிரட்டிய கேப்டன் பாட் கம்மின்ஸ், 4 ஓவர்களில் வெறும் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைச் சரித்து சென்னையின் ரன் குவிப்பை முடக்கினார். அவருடன் சாகிப் உசேன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பலம் சேர்த்தார்.
இஷான் கிஷன் - கிளாசன் ஜோடியின் அதிரடி வேட்டை
தொடர்ந்து 181 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி களம் புகுந்த ஹைதராபாத் அணிக்கு, ஆரம்பத்திலேயே டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா (26) ஜோடி ஏமாற்றம் அளித்தாலும், பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசன் கூட்டணி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்த இஷான் கிஷன் 47 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். மறுமுனையில் அதிரடியாக துண நின்ற ஹென்ரிச் கிளாசன் 26 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், ஹைதராபாத் அணி 19 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கோட்டைத் தொட்டது. சென்னை அணியின் பந்துவீச்சில் முகேஷ் சவுத்ரி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
மாறிப்போன பிளே-ஆஃப் வாய்ப்புகள்
சொந்த மண்ணில் சந்தித்த இந்த அதிர்ச்சித் தோல்வியின் காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே-ஆஃப் சுற்றுக்கான தகுதி பெறும் வாய்ப்பு தற்போது பெருமளவில் சிக்கலாக மாறியுள்ளது. அதே வேளையில், சென்னைக்கு எதிரான இந்த மாபெரும் வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை மிக வலுவாக உறுதி செய்துள்ளது.
