லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியை ரிஷப் பண்ட் திடீரென ராஜினாமா செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வரும் மே 31ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில் பெங்களூரு அணி ஏற்கனவே ஃபைனலுக்கு சென்று விட்டது. அந்த அணியுடன் மோதப்போகும் இன்னொரு அணி எது என்பதை தீர்மானிக்கும் தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதுகிறது.
ரிஷப் பண்ட் ராஜினாமா
இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடையும் வண்ணம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நடப்பு சீசனில் லக்னோ அணி பத்தாவது இடத்தைப் பிடித்தது. இது அணி நிர்வாகம் இடையே கடும் நெருக்கடியை உண்டாக்கியது. இதனால் இந்த வீழ்ச்சிக்கு தார்மீக பொறுப்பேற்று கேப்டன் ரிஷப் பண்ட் தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். அவரது முடிவை லக்னோ அணி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதிக விலைக்கு ஏலம் போன வீரர்
இதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தலைமை தாங்கினார். அதிலிருந்து விலகிய பிறகு, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.27 கோடிக்கு லக்னோ அணி அவரை வாங்கியது. ரிஷப் பண்ட் அந்த அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றார். ஆனால் அவரது தலைமையின் கீழ் கடந்த 2 சீசன்களாக விளையாடிய லக்னோ அணி தொடர்ச்சியாக ஏமாற்றத்தையே சந்தித்தது.
10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணி கடந்த சீசனில் ஏழாவது இடத்தைப் பிடித்தது. அதைவிட மோசமாக இந்த ஆண்டு 14 போட்டிகளில் விளையாடி வெறும் நான்கு வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து மேலும் சரிவை சந்தித்தது.
இந்த நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவது போன்ற முடிவுகள் ஒருபோதும் எளிதானவை அல்ல. ரிஷப் பண்ட் இந்தக் கோரிக்கையுடன் அணி நிர்வாகத்தை அணுகிய நிலையில் நாங்கள் அதை மரியாதையுடன் ஏற்றுக்கொண்டோம். இப்போது எங்கள் கவனம் முழுவதும் சிறந்த தரத்தை எட்டுவதற்காக அணியை மீண்டும் கட்டமைத்து மறுசீரமைப்பதில் உள்ளது என லக்னோ அணியைச் சேர்ந்த டாம் மூடி தெரிவித்துள்ளார்.
பேட்டிங்கில் ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரின் மிகவும் அதிரடியான ஆட்டக்காரர்களில் ஒருவராக இருந்த பண்ட் லக்னோ அணிக்காக விளையாடிய இந்த 2 ஆண்டுகளில் அந்த ஃபார்மை வெளிப்படுத்தத் திணறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
