9 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய இளம் சிங்கங்கள் இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்து மலைக்க வைத்துள்ளது.
சரித்திரம் படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
இப்போட்டியின் நாயகனாக உருவெடுத்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு இங்கிலாந்து வீரர்களை திணறடித்தார்.
வெறும் 71 பந்துகளில் 150 ரன்களை எட்டிய அவர், யு19 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஒட்டுமொத்தமாக 80 பந்துகளில் 175 ரன்கள் (15 பவுண்டரி, 15 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழந்தார். ஒரே இன்னிங்ஸில் 15 சிக்ஸர்களை அடித்ததன் மூலம், யு19 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த வீரராக புதிய சாதனை படைத்தார்.
சிக்சர் மன்னன்: புதிய உலக சாதனை
சூர்யவன்ஷி தனது 25 இன்னிங்ஸ்களில் மொத்தம் 110 சிக்ஸர்களை எட்டியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் வங்கதேசத்தின் ஜவாத் அப்ரார் (33 இன்னிங்ஸில் 55 சிக்ஸர்) இவரை விட வெகு தொலைவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டு முயற்சியால் உயர்ந்த ஸ்கோர்
சூர்யவன்ஷிக்கு உறுதுணையாக ஆடிய கேப்டன் ஆயுஷ் மாத்ரே 53 ரன்கள் எடுத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின் வந்த வேதாந்த் திரிவேதி (32), வியான் மல்கோத்ரா (30), அபிக்யன் குண்டு (40) ஆகியோர் தங்களது பங்களிப்பை சரியாகச் செய்தனர். இறுதியில் கினிஷ் சௌகான் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஸ்கோரை 400-ஐ கடக்க உதவினார்.
தகர்க்கப்பட்ட சாதனைகள்
யு19 உலகக் கோப்பை நாக்அவுட் போட்டியில் 350+ ரன்களைக் கடந்த முதல் அணி இந்தியா (411 ரன்கள்). இதற்கு முன் 2024-ல் ஆஸ்திரேலியா எடுத்த 253 ரன்களே இறுதிப் போட்டியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதனை இந்தியா தற்போது தகர்த்துள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் மூன்று முறை 400 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே அணி இந்தியா மட்டுமே.
யு19 உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய 'சேஸிங்' ரன் 311 மட்டுமே. தற்போது இங்கிலாந்து வெற்றி பெற 412 ரன்கள் தேவை என்பதால், இந்திய அணி மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பையை ஏந்துவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
