டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஏஐ (AI) உச்சி மாநாட்டில், இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோருக்கு எதிராகக் கோஷமிட்டதுடன், சர்ச்சைக்குரிய வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டுகளைக் களைந்து போராட்டம் நடத்திய வழக்கில், இளைஞர் காங்கிரஸ் தேசியத் தலைவர் உதய் பானு சிப் டெல்லி போலீஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டத்தின் பின்னணியாகச் செயல்பட்டதாகக் கூறி உதய் பானு சிப்பை நான்கு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப் பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தேச நலனுக்காகக் குரல் கொடுத்தால் கைதா?
தமது கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமைதியான முறையில் போராடுவது ஒவ்வொரு இந்தியரின் ஜனநாயக உரிமை என்றும், தேச நலனுக்காக அச்சமின்றி குரல் கொடுத்த சக உறுப்பினர்களை நினைத்துப் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் நமது நாட்டின் விவசாயிகளுக்கும், ஜவுளித் தொழிலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இந்தியாவின் முக்கியத் தரவுகளை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் செயலைச் சுட்டிக்காட்டியதற்காகக் கைது செய்வது சர்வாதிகாரப் போக்கு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் துணையிருக்கும்
பாரதிய நியாய சன்ஹிதாவின் பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், உண்மைக்கும் அரசியலமைப்பிற்கும் மதிப்பளிக்கும் காங்கிரஸ் கட்சி, கைது செய்யப்பட்ட தனது தொண்டர்களுக்குத் துணையாக உறுதியுடன் நிற்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அச்சப்படத் தேவையில்லை எனக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை 'கோழைத்தனம்' எனச் சாடியுள்ளார். மாநாட்டுப் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்து நடத்தப்பட்ட இந்தப் போராட்டமும், அதனைத் தொடர்ந்த கைதும் தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
