மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்குள் தற்பொழுது வெளிப்படையான பிளவு வெடித்துள்ளது. அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ரிஜூ தத்தா வெளியிட்டுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மம்தா பானர்ஜிக்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் 50 எம்எல்ஏக்கள் ஒன்றுபட்டு அணிவகுத்து நிற்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், சட்டப்பேரவை திரிணாமூல் கட்சியின் மொத்த பலத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அவர்கள் பெற்றுள்ளதாகவும், இதனால் மம்தாவின் பிடி கைநழுவி வருவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கூட்டத்தைப் புறக்கணித்த எம்எல்ஏக்களும் போலி கையெழுத்து சர்ச்சையும்
சமீபத்தில் நடந்த திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில் 61 பேர் பங்கேற்காமல் அதிரடியாகப் புறக்கணித்தனர். இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், அக்கட்சியின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக சோபன்தேப் சட்டோபாத்யாய் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இந்தத் தேர்வுக்குரிய கடிதத்தில் தாங்கள் கையெழுத்திடவே இல்லை என்று எம்எல்ஏக்கள் சந்தீபன் சஹா மற்றும் ரிதப்ரதா பானர்ஜி ஆகிய இருவரும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். இந்த போலி கையெழுத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அதிருப்தி காட்டிய இருவரையும் கட்சித் தலைமை உடனடியாக நீக்கியது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தற்போதைய மேற்கு வங்க அரசு சிஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது பரபரப்பைக் கூட்டியுள்ளது.
மேற்கு வங்கத்தில் சிவசேனா பாணி அரசியல்
தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய ரிஜூ தத்தா, மேற்கு வங்கத்தில் இப்போது மகாராஷ்டிரா பாணி அரசியல் சூழல் நிலவுவதாகத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். தங்களது அணியில் சுமார் 50 எம்எல்ஏக்கள் உள்ளதால், தாங்களே உண்மையான திரிணாமூல் காங்கிரஸ் என்றும், அதனால் எதிர்க்கட்சித் தலைவராக ரிதப்ரதா பானர்ஜி தான் நீடிப்பாரே தவிர, சோபன்தேப் சட்டோபாத்யாய் இருக்க முடியாது என்றும் சவால் விடுத்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உடைந்து, உத்தவ் தாக்கரேவின் ஆட்சி வீழ்த்தப்பட்டதோடு கட்சியின் பெயரும் சின்னமும் ஷிண்டே கைக்கே சென்றது. அதே பாணியில், தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதால் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை நாட அதிருப்தி குழுவினர் தயாராகி வருகின்றனர்.
பாஜகவை நோக்கிப் பாயும் தலைவர்கள்
தேர்தலில் பாஜக 208 இடங்களில் அமோக வெற்றி பெற்று, சுவேந்து அதிகாரி புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், 80 இடங்களை மட்டுமே பெற்ற திரிணாமூல் தலைவர்கள் பலர் அடுத்தடுத்து பாஜகவுக்குத் தாவி வருகின்றனர். இன்னும் சிலர் தீவிர அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்து வருகின்றனர். தேர்தல் முறைகேடுகள் காரணமாகக் கடந்த மாதம் 29-ஆம் தேதி ஃபால்டா தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற போது, திரிணாமூல் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்தே விலகி அதிர்ச்சி அளித்தார். அதேபோல், பல எம்எல்ஏக்கள் புதிய முதல்வர் சுவேந்து அதிகாரிக்குத் தங்களது பகிரங்க ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற எம்பிக்களும் அதிருப்தியில்
சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமன்றி, நாடாளுமன்ற எம்பிக்கள் மத்தியிலும் அதிருப்தி அலை வீசுகிறது. திரிணாமூல் காங்கிரஸ் எம்பி ககோலி கோஷ் அண்மையில் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகி, முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் நெருக்கம் காட்டி வருகிறார். தற்போதைய சூழலில் திரிணாமூல் காங்கிரஸுக்கு 28 மக்களவை எம்பிக்களும், 13 மாநிலங்களவை எம்பிக்களும் உள்ள நிலையில், அவர்களில் சுமார் 20 எம்பிக்கள் தற்பொழுது ஆளும் பாஜகவுடன் ரகசியத் தொடர்பில் இருப்பதாக வெளியாகி வரும் தகவல்கள் மம்தா பானர்ஜிக்கு மேலும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.
Follow us on our official WhatsApp channel for breaking news alerts and updates!
