கேரள மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக வி.டி. சதீசன் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர் தீபா தாஸ்முன்ஷி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர். கடந்த மே 7-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரமும் அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மாநிலத்தின் மூத்த தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே நடத்திய விரிவான ஆலோசனைக்குப் பிறகு வி.டி. சதீசன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதல்வராகப் பொறுப்பேற்கும் சதீசன்
நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 102 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 63 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆட்சியைத் தீர்மானிக்கும் இந்த வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த முதல்வர் யார் என்பதில் வி.டி. சதீசன், ரமேஷ் சென்னிதாலா, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவியது. இதனால் கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த இழுபறிக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன் விரைவில் கேரளாவின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் மாநிலத்தில் புதிய கூட்டணி ஆட்சி அமையவுள்ளது.
