பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ (ISI) மற்றும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஒரு பெரிய பயங்கரவாத கும்பலை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அதிரடியாகக் கலைத்துள்ளனர். வெளிநாட்டுத் தலைவர்களின் உத்தரவின் பேரில் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்த 8 சந்தேக நபர்களைத் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் ஒருங்கிணைந்த தேடுதல் வேட்டை நடத்தி போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் பின்னல் ஆடை நிறுவனங்களில் பதுங்கல்
கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பின்னல் ஆடை நிறுவனங்களில் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தவர்கள். மிஸானூர் ரஹ்மான், முகமது ஷாபத், உமர், முகமது லிட்டன், முகமது ஷாஹித் மற்றும் முகமது உஜ்ஜல் என அடையாளம் காணப்பட்ட இவர்கள் அனைவரும் திருப்பூரில் பிடிபட்டனர். எஞ்சிய இருவர் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், போலி ஆதார் அட்டைகளை வைத்துத் தங்கள் அடையாளத்தை மறைத்துப் பதுங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லி கோயில்கள் மற்றும் செங்கோட்டைக்கு குறி!
பயங்கரவாதிகள் டெல்லியின் நெரிசலான மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் புராதனச் சின்னங்களைக் குறிவைத்து ஐ.இ.டி (IED) வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சாந்தினி சவுக் பகுதியில் உள்ள ஒரு கோயில் மற்றும் செங்கோட்டைக்கு அருகிலுள்ள பகுதிகளை அவர்கள் ரகசியமாகப் படம் பிடித்த வீடியோக்கள் அவர்களின் செல்போன்களில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்காரணமாக டெல்லி முழுவதும் தற்போது உச்சக்கட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் டூ வங்கதேசம்
இந்த கும்பலை வங்கதேசத்தில் இருந்து செயல்படும் காஷ்மீரைச் சேர்ந்த ஒரு நபர் இயக்கி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதப் பயிற்சி பெற்ற அந்த நபரின் கட்டளைப்படியே இந்த 8 பேரும் செயல்பட்டு வந்துள்ளனர். டெல்லி மெட்ரோ மற்றும் பல்வேறு இடங்களில் "காஷ்மீரை விடுவிக்கவும்" என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதன் பின்னணியை ஆராய்ந்தபோதுதான், இந்த நெட்வொர்க் தமிழகம் வரை நீண்டுள்ளது போலீசாருக்குத் தெரியவந்தது.
கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள்: தீவிர விசாரணை!
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த டிஜிட்டல் ஆதாரங்களைக் கொண்டு இவர்களுக்கு நிதியுதவி செய்தவர்கள் யார்? மற்றும் இவர்களுடன் தொடர்பில் இருக்கும் மற்ற நபர்கள் யார்? என்பது குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
