தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று ஒருமனதாக அதிரடித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். கல்விக்காகத் தனியார் பள்ளிகளை நோக்கி மக்கள் ஓடிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், இவர்களின் இந்த அசத்தலான கூட்டு முடிவு ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விவசாயிகளின் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்
தெலங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் லட்சுமண் சந்தா என்ற கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் அண்மையில் தங்களுக்குள் ஒன்று கூடி, தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்வித் தரம் குறித்து மிகத் தீவிரமான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். இந்த கிராம பஞ்சாயத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தங்களின் வாழ்வாதாரக் கல்வியை மேம்படுத்துவது குறித்து அவர்கள் நடத்திய நீண்ட ஆலோசனையின் இறுதியில், கிராமத்தில் உள்ள அனைத்துப் பிள்ளைகளையும் அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் எனவும், எக்காரணத்தைக் கொண்டும் தனியார் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கக் கூடாது எனவும் ஒருமனதாகப் பிரகடனம் செய்தனர்.
அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கக் காரணங்கள்
தனியார் பள்ளிகளைப் புறக்கணித்துவிட்டு அரசுப் பள்ளிகளைத் தங்களின் முதல் தேர்வாகத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் குறித்தும் அவர்கள் விளக்கியுள்ளனர். தனியார் கல்வி நிறுவனங்களை விட அரசுப் பள்ளிகளில் தான் அரசாங்கத்தால் முறையாகத் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட, நன்கு படித்த அனுபவமிக்க ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று அவர்கள் நம்புகின்றனர். அதுமட்டுமன்றி, பிள்ளைகள் உடல்ரீதியாக வளரப் பரந்த விளையாட்டு மைதானங்கள், அவர்களின் பகுத்தறிவை வளர்க்கும் நவீன அறிவியல் ஆய்வகங்கள் எனப் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் தங்களின் ஊர் அரசுப் பள்ளியிலேயே நிறைந்துள்ளன. இதன் காரணமாகவே தங்களின் ஒட்டுமொத்த கிராமத்துப் பிள்ளைகளையும் அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க முடிவு செய்ததாக அப்பகுதியின் ஊராட்சி மன்றத் தலைவி படிகலா லட்சுமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
