உலகப் புகழ்பெற்ற சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரிடம் இருந்து நான் பெரும் உத்வேகம் பெற்றேன் என்று தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பொது மேடையில் பேசியிருப்பது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், ஜெர்மனி சர்வாதிகாரியான ஹிட்லரின் நாஜிப் படையில் 'ஹைட்ரா' (HYDRA) என்ற மிகவும் ரகசியமான அறிவியல் பிரிவு ஒன்று செயல்பட்டு வந்தது. பல்வேறு கொடூரமான குற்றச்சாட்டுகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் இந்தப் பிரிவுதான் முக்கியக் காரணமாக இருந்தது என்று வரலாறு கூறுகிறது.
பெயர்க் காரணத்தை விளக்கிய முதல்வர்
இந்த நிலையில், அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஹிட்லரின் ஹைட்ரா அமைப்பானது, எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்களைத் தேடித்தேடி படுகொலை செய்யும் அசாத்திய திறன் கொண்ட ஒன்றாக விளங்கியது என்று குறிப்பிட்டார். அந்தச் சர்வாதிகாரியிடம் இருந்து பெற்ற உத்வேகத்தின் காரணமாகவே, தற்போதைய தெலங்கானா அரசின் பேரிடர் மீட்பு மற்றும் பாதுகாப்புப் படைப் பிரிவுக்கு 'ஹைட்ரா' என்று நான் பெயர் சூட்டினேன் என்று ஓப்பனாகப் பேசி அதிரவைத்தார்.
ஆக்கிரமிப்பு அகற்றலுக்குப் புதிய ஐடியா
மேலும் தனது உரையில், இந்த ஹைட்ரா அமைப்பானது தற்போது ஹைதராபாத் நகரில் எவ்விதப் பாகுபாடும் பார்க்காமல் ஆக்கிரமிப்புகளைத் துணிச்சலாக அகற்றி வருகிறது என்று ரேவந்த் ரெட்டி பெருமிதம் தெரிவித்தார். தெலங்கானா அரசு செயல்படுத்தி வரும் இந்த ஹைட்ரா திட்டத்தை, நாட்டின் பிற முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா போன்ற பெருநகரங்களிலும் தாராளமாகப் பின்பற்றலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார். நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படுவதால் மட்டுமே, மழைக்கால வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொள்ள முடியும் என்றும் முதல்வர் விளக்கமளித்தார்.
எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
முதலமைச்சரின் இந்த சர்வாதிகாரப் பேச்சுக்கு மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான கிஷன் ரெட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி எப்போதுமே ஹிட்லரின் மனப்போக்கைக் கொண்டது என்றும், அவர்களின் பழைய அவசர நிலை (Emergency) காலக் கொடூர மனப்பான்மை மீண்டும் தற்போது வெளிப்பட்டு உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாணியிலேயே ரேவந்த் ரெட்டியும் பேசி வருவதாக அவர் விமர்சித்தார். இதேபோல், தெலங்கானாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் தலைவர்களும், முதல்வரின் இத்தகைய பேச்சுக்குத் தங்களது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
