நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நோக்கத்துடன், நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு அமர்வு இன்று தொடங்கியது. இந்த அமர்வின் முதல் நாளில், 131-வது அரசியல் சாசன திருத்த மசோதா, 2026-ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டத் திருத்த மசோதா ஆகிய மூன்று முக்கிய மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இந்த மசோதாக்களை முன்மொழிந்தனர். மசோதாவைத் தாக்கல் செய்து பேசிய அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதே தொகுதி மறுவரையறையின் நோக்கம் என்றும், இதன் மூலம் எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையாது என்றும் விளக்கமளித்தார். அனைத்து மாநிலங்களுக்கும் இடங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, மக்களவையின் மொத்த இடங்கள் 815 ஆக உயரும் என்றும், அதில் 272 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குத் தேஜஸ்வி சூர்யா பதிலடி
இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தேவையற்ற அச்சத்தைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகள் சிந்துவது வெறும் முதலைக் கண்ணீர் என்று சாடிய அவர், தென்னிந்தியாவில் திட்டமிட்டுத் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகத் தெரிவித்தார். 2026-இல் நடைபெறவுள்ள தொகுதி மறுவரையறைப் பணியைப் பாஜக தலைமையிலான மத்திய அரசே மேற்கொள்வது பாதுகாப்பானது என்றும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆந்திராவைப் பிரித்தபோது ஆங்கிலேயர்களை விட மோசமாகச் செயல்பட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
பெண்கள் உரிமையும் அரசியலமைப்புச் சட்டமும்
இந்தியப் பெண்கள் தேசியக் கொள்கை முடிவுகளில் பங்கேற்பதற்கான உரிமைக்காகச் சுமார் 40 ஆண்டுகளாகக் காத்திருப்பதாகக் குறிப்பிட்ட தேஜஸ்வி சூர்யா, தற்போது அந்த உரிமை நனவாகப் போகும் வேளையில் எதிர்க்கட்சிகள் புதிய சாக்குப்போக்குகளைக் கூறி முட்டுக்கட்டை போடுவதாகத் தெரிவித்தார். தொகுதி மறுவரையறைக்கு எதிராக முன்வைக்கப்படும் வாதங்கள் அனைத்தும் அடிப்படை அற்றவை என்றும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின்படியே மத்திய அரசு செயல்படுவதாகவும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். பெண்களுக்கான இடஒதுக்கீட்டைத் தாமதப்படுத்தவே எதிர்க்கட்சிகள் இத்தகைய அராஜகமானப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதாக அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
