தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 19) விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்ஷி மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு அறிவிக்கும் இலவசத் திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைக்கும் என நீதிபதிகள் கடும் கவலை தெரிவித்தனர்.
தகுதியற்றவர்களுக்கும் சலுகையா?
விசாரணையின் போது பேசிய நீதிபதிகள், அரசின் சலுகைகள் மற்றும் நலத்திட்டங்கள் உண்மையிலேயே தகுதியுடையவர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்று குறிப்பிட்டனர். "வசதியானவர்களும் இலவச மின்சாரத்தைப் பெறுவது எந்த விதத்தில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பிய அமர்வு, இது போன்ற நடைமுறைகள் நாட்டின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல என்று சுட்டிக்காட்டியது. மேலும், சமீபகாலமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் திடீர் திடீரென அறிவிக்கப்படும் இலவசங்களால், மக்கள் எதிர்காலத்தில் வேலைக்குச் செல்லும் ஆர்வத்தையே இழந்துவிடுவார்களோ என்ற அச்சம் எழுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பொருளாதாரச் சுமையும் வரி செலுத்துவோரின் நிலையும்
100 யூனிட் இலவச மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது என்பது குறித்து விளக்கம் கேட்ட நீதிபதிகள், கடன் சுமையிலும் நிதிப் பற்றாக்குறையிலும் தவிக்கும் மாநிலங்கள் இது போன்ற இலவசங்களை வழங்குவது வளர்ச்சியைப் பாதிக்கும் என்றனர். "இலவசத் திட்டங்களுக்கான நிதிச் சுமை இறுதியில் நேர்மையாக வரி செலுத்தும் பொதுமக்களின் தலையில்தான் விழுகிறது. இந்தத் தொகையை கல்விக்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்தினால் நாடு பொருளாதார ரீதியாக வலுவடையும்" என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
தமிழக அரசுக்கு உத்தரவும் அரசியல் அதிர்வுகளும்
இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக அரசியல் கட்சிகள் அதன் பின்விளைவுகளைச் சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், இலவசங்களுக்கான நிதி ஆதாரம் குறித்து தமிழக அரசு விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இலவசங்கள் குறித்து உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள இந்த சரமாரி கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
