ஆந்திர மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது குறித்த விவாதம் சுமார் மூன்று மணி நேரம் அனல் பறக்க நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் நடந்த முறைகேடுகளை ஆதாரங்களுடன் பட்டியலிட்டார்.
ஆதாரங்களுடன் அடுக்கப்பட்ட புகார்கள்
கடந்த 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், சுமார் 60 லட்சம் லிட்டர் கலப்பட நெய்யை முந்தைய அரசு தெரிந்தே கொள்முதல் செய்துள்ளதாக முதல்வர் குற்றம்சாட்டினார். இதன் மூலம் சுமார் 231.51 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலக்கப்பட்டிருந்தது என்.டி.டி.பி (NDDB) அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும், கலப்பட நெய் விநியோகத்தில் ஈடுபட்ட குறிப்பிட்ட நிறுவனங்களின் பெயர்களையும் அவர் சபையில் வெளிப்படுத்தினார்.
நீதிமன்ற உத்தரவும் விசாரணை கமிஷனும்
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தற்போது ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளும் ஊழியர்களும் ஒருங்கிணைந்து செய்த இந்தத் தவறு குறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார். இதற்கிடையே, லஞ்சம் வாங்கிய புகாரில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவரின் உதவியாளர் சின்னப்பா கைது செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பவன் கல்யாணின் ஆவேசக் கேள்வி
இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய துணை முதல்வர் பவன் கல்யாண், நெய்யில் கலக்கப்பட்டது என்ன மாதிரியான ரசாயனம் என்பது அந்தப் பெருமாளுக்கே வெளிச்சம் என்று வேதனை தெரிவித்தார். சிபிஐ அறிக்கையின்படி அது நெய்யே இல்லை என்று கூறப்பட்டுள்ள நிலையில், முந்தைய ஆட்சியாளர்கள் ஏன் இதற்கு மல்லுக்கட்ட வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது என்றும் அவர் ஆவேசமாகப் பேசினார்.
