அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து வண்ணங்களை பூசி மகிழ்ந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவருக்கும் இனிய ஹோலி நல்வாழ்த்துகள். இது அனைவரிடமும் அன்பைப் பொழியும் மற்றும் மக்களிடையே உள்ள வெறுப்பைத் துடைத்தெறியும் ஹோலியாக அமையட்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், தனது எக்ஸ் (X) தளத்தில், "இந்த வண்ணங்களின் திருவிழா உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கைகளையும், உற்சாகத்தையும், அளவற்ற மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
உலக அமைதிக்கான அறைகூவல்
இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா, ஹோலி பண்டிகை என்பது சாதி, மத பேதமின்றி மக்கள் ஒருவரையொருவர் தழுவி அன்பைப் பகிர்ந்து கொள்ளும் தனித்துவமான திருவிழா என்று குறிப்பிட்டார். இதே வேளையில், மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் குறித்து கவலை தெரிவித்த அவர், போர்களைத் தூண்டும் நாடுகள் உடனடியாக அமைதிக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்தினார்.
உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்பதே காங்கிரஸின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார். தீமையை நன்மை வென்றதை நினைவுகூரும் இத்திருவிழா, நேற்றைய 'ஹோலிகா தகன்' நிகழ்வைத் தொடர்ந்து இன்று நாடு முழுவதும் வண்ணமயமான கொண்டாட்டங்களுடன் களைகட்டியுள்ளது.