புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, இன்று முதல் மூன்று நாட்களுக்கு மாநிலம் முழுவதும் மதுபான விற்பனைக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வாக்குப் பதிவிற்கு முந்தைய 48 மணி நேர அமைதிக் காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று இரவு 10 மணி முதலே அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டு, கலால் துறையினரால் அதிகாரப்பூர்வமாகச் சீல் வைக்கப்பட்டன.
கலால் துறை நடவடிக்கை
புதுச்சேரி முழுவதும் உள்ள 453 மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கிடங்குகளுக்குச் சீல் வைக்கும் பணி நேற்று மாலை முதலே தொடங்கியது. மது விற்பனைத் தடை அமலுக்கு வருவதற்கு முன்னதாக, நேற்று இரவு மதுபானக் கடைகளில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தடையை மீறி எவரேனும் மது விற்பனையில் ஈடுபட்டால், மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் மற்றும் கலால் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீவிரக் கண்காணிப்பு
இது குறித்துப் பேசிய வட்டாட்சியர் ராஜேஷ் கண்ணா, மதுபானக் கடத்தலைத் தடுக்கப் புதுச்சேரியின் 19 எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், கலால் துறையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனைத்து மதுபானக் கிடங்குகள் மற்றும் எல்லைப் பகுதிகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் நேரடியாகக் கண்காணிக்கப்படுகின்றன. தேர்தல் சுமூகமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
