மத்திய அரசால் நடத்தப்படும் நீட் (NEET-UG 2026) உள்ளிட்ட முக்கியத் தேசிய நுழைவுத் தேர்வுகளில் தொடர்ந்து அரங்கேறி வரும் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) ஆன்-ஸ்கிரீன் மதிப்பீட்டு முறைகேடுகளைக் கண்டித்து, நாடு முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இளைஞர்களால் வழிநடத்தப்படும் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற அமைப்பின் சார்பில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஃப்ரீடம் பார்க் (Freedom Park) திடலில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜூன் 14) பிரம்மாண்டப் போராட்டம் நடைபெற்றது. தேசியத் தேர்வு முறைகேடுகளுக்கு முழுப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரண்டனர்.
போராட்டத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ் மற்றும் சோனம் வாங்சுக்
தலைநகர் டெல்லியில் நடந்த முதல்கட்டப் போராட்டத்தில் சில தவிர்க்க முடியாத பணிச்சுமையால் பங்கேற்க முடியாமல் போன பிரபல பன்மொழி நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ், இன்று பெங்களூருவில் நடைபெற்ற போராட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். அவருடன் லடாக் பகுதியைச் சேர்ந்த புகழ்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே ஆகியோரும் மேடையில் தோன்றி மாணவர்களிடையே உரையாற்றினர். மழையில் நனைந்தபடி திரண்டிருந்த இளைஞர்கள் மத்தியில் பேசிய பிரகாஷ் ராஜ், "இந்த நாட்டின் இளைஞர்கள் தங்களது எதிர்காலத்திற்கான போராட்டத்தைக் கையில் எடுத்துவிட்டார்கள். ஓய்வு பெறும் வயதைத் தாண்டியும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் முதியவர்களே, இளைஞர்களின் கனவுகளோடு விளையாடாமல் நீங்கள் விலகிச் செல்லுங்கள்; இளைஞர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கிவிட்டனர்" என்று ஆவேசமாக முழக்கமிட்டார்.
சிஸ்டத்தை அம்பலப்படுத்தினால் ‘பாற்றை’களா?.. ஒருங்கிணைப்பாளர் ஆக்ரோஷம்
போராட்டத்தின் போது மாணவர்கள் கைகளில் மத்திய பாஜக அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பேசிய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், "நாட்டின் கல்வி அமைப்பே முற்றிலும் சீர்கெட்டுப் போய்விட்டது, இதற்குப் பொறுப்பானவர்கள் தங்களது கடமையில் இருந்து தவறிவிட்டனர்" என்று சாடினார். இப்போராட்டம் எந்தவொரு அரசியல் ஆதாயத்திற்கோ அல்லது குறிப்பிட்ட கட்சிக்கு எதிரான சவாலோ அல்ல என்றும், இது குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வுப் பேரணி என்றும் அவர் விளக்கினார். அதேபோல், காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே பேசுகையில், "அரசாங்கத்தின் தவறுகளையும், கல்வி அமைப்பில் உள்ள ஓட்டைகளையும் நாம் அம்பலப்படுத்த முயலும் போதெல்லாம் நம்மை அவர்கள் 'கரப்பான்பூச்சிகள்' (Cockroaches) என்று கொச்சைப்படுத்துகிறார்கள். இந்த ஒடுக்குமுறைக்கு நாம் இனி பயப்படப் போவதில்லை. இதற்காக யாராவது சிறைக்குச் செல்ல வேண்டும் என்றால், முதல் நபராக நான் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன்" என்று ஆக்ரோஷமாகப் பேசினார். பெங்களூரு மட்டுமின்றி, ஹைதராபாத்தின் தர்ணா சவுக்கிலும் இன்று இதே கோரிக்கையை முன்வைத்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
