புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் தவறவிட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை, உரியவரிடம் ஒப்படைத்த தண்ணீர் வியாபாரியின் நேர்மை பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவளக்குப்பத்தைச் சேர்ந்த முத்தையன் என்பவர், தனது குடும்பத்தினருடன் கடைக்குச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நகைகள் இருந்த கைப்பையை (Purse) தவறவிட்டுள்ளார். அதில் ஒரு தங்க பிரேஸ்லெட் உள்ளிட்ட சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆபரணங்கள் இருந்துள்ளன. பையைத் தொலைத்ததை உணர்ந்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சென்ற இடமெல்லாம் தேடியும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் பலன் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதே சமயம், அந்தப் பகுதியில் தண்ணீர் விநியோகம் செய்யும் முருகன் என்பவர், சாலையில் கிடந்த அந்தப் பையை எதேச்சையாகக் கண்டெடுத்துள்ளார். அதனைத் திறந்து பார்த்தபோது உள்ளே தங்க நகைகள் இருப்பதைக் கண்டு திகைத்த அவர், தாமதிக்காமல் உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்று பையை ஒப்படைத்தார்.
புகார் அளித்திருந்த முத்தையன் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட காவல்துறை, இரு தரப்பினரையும் வரவழைத்து நகைகளை உறுதி செய்தனர். அனைவர் முன்னிலையிலும் முருகன் அந்த நகைகளை உரியவரிடம் ஒப்படைத்தார். தனது வாழ்வாதாரத்திற்காகக் கஷ்டப்பட்டாலும், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாத முருகனின் இந்த உயரிய குணத்தைப் பாராட்டி, காவல்துறையினர் அவருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். இழந்த நகைகள் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் முத்தையன் குடும்பத்தினர் முருகனுக்குத் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.