பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” ராணுவ நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இந்திய விமானப்படை 88 வினாடிகள் கொண்ட அதிரடி வீடியோவை இன்று வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் எல்லைப்பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத கட்டமைப்புகள் துல்லியமாக தாக்கப்பட்ட காட்சிகள் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
வீடியோ, பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உரையுடன் தொடங்கி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் முக்கிய தருணங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்ததுடன், இந்தியா முழுவதும் கடும் அதிருப்தி எழுந்தது. விசாரணையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
இதற்குப் பதிலடியாக, 2025 மே 7ஆம் தேதி இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை தொடங்கின. இந்த நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் இருந்த ஒன்பது பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக அழிக்கப்பட்டன. பொதுமக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல், குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து தனது எக்ஸ் பதிவில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, “நமது ஆயுதப்படைகள் இணையற்ற தைரியத்தையும் துல்லியத்தையும் வெளிப்படுத்தின. நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் அவர்களின் வீரத்தை வணங்குகின்றனர்” என்று குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கை, இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியதாக பாதுகாப்பு நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். குறிப்பாக ரேடார் தொழில்நுட்பம், வான் பாதுகாப்பு அமைப்புகள், கமாண்ட் சென்டர்கள் மற்றும் டிரோன் பயன்பாடு முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. எதிரிகளின் கண்காணிப்பை தவிர்த்து உளவு சேகரிப்பதும், துல்லிய தாக்குதல்களும் டிரோன்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், பாதுகாப்பு தொழில்நுட்ப துறையில் செயல்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இந்த நடவடிக்கைக்குப் பிறகு வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளன. பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் இந்தியா தற்சார்பு நிலையை நோக்கி முன்னேறி வருவதாக துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
