ஒடிசா மாநிலம் கேந்துஜார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜீத்து முண்டா என்ற பழங்குடியின நபர், காலமான தனது சகோதரி கக்ரா முண்டாவின் வங்கி கணக்கில் இருந்த ரூ.19,400-ஐ எடுப்பதற்காக ஒடிசா கிராமின் வங்கிக்குச் சென்றுள்ளார். முறையான கல்வி அறிவில்லாத அவரிடம் இறப்புச் சான்றிதழோ அல்லது வாரிசு ஆவணமோ இல்லாததால், கணக்கு வைத்திருப்பவர் நேரில் வரவேண்டும் அல்லது உரிய ஆவணங்களைத் தர வேண்டும் என வங்கி மேலாளர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதனால் மிகுந்த விரக்தி அடைந்த ஜீத்து முண்டா, கடந்த திங்கட்கிழமை சுடுகாட்டிற்குச் சென்று புதைக்கப்பட்ட தனது சகோதரியின் உடலைத் தோண்டி எடுத்து, துணியால் சுற்றப்பட்ட எலும்புக்கூட்டைத் தனது தோளில் சுமந்தபடி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து வங்கிக்கு வந்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
வங்கியின் விளக்கம் மற்றும் அரசின் நடவடிக்கை
இந்த விபரீத காட்சிகளால் நாடு முழுவதும் அதிர்வலைகள் எழுந்த நிலையில், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வங்கி நிர்வாகம், கணக்கு வைத்திருப்பவரை நேரில் வருமாறு கூறியதாக வரும் தகவல் தவறானது என்றும், ஆவணங்கள் இல்லாததே பணத்தை வழங்கத் தடையாகவும் இருந்தது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், அந்த நபர் மதுபோதையில் இருந்ததால் நடைமுறைகளை ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளது. இதையடுத்து, அரசு அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக வாரிசு சான்றிதழை வழங்கினர். தற்போது அந்தப் பணம் மூன்று வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட நபருக்கு உதவியாக அரசு சார்பில் ரூ.30,000 வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் இந்தச் செயல் தேவையற்ற அலைக்கழிப்பு என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
