ஒடிசா மாநிலம் கியோஞ்சார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிது முண்டா என்பவரின் சகோதரி காக்ரா முண்டா, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார். காக்ராவின் கணவர் மற்றும் ஒரே குழந்தையும் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், ஜிது முண்டா மட்டுமே அவருக்கு ஒரே உறவினராக இருந்தார். ஒடிசா கிராமின் வங்கியில் காக்ரா வைத்திருந்த கணக்கில் ரூ.19,300 சேமிப்பு பணம் இருந்துள்ளது. வறுமையில் வாடிய ஜிது இப்பணத்தைப் பெற வங்கிக்குச் சென்றபோது, கணக்கு வைத்திருப்பவர் நேரில் வரவேண்டும் அல்லது வாரிசுச் சான்றிதழ் போன்ற சட்டப்பூர்வ ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என மேலாளர் கறாராகக் கூறிவிட்டார்.
எலும்புக் கூட்டோடு மூன்று கிலோமீட்டர் பயணம்
படிப்பறிவற்ற பழங்குடியினரான ஜிதுவிடம் முறையான இறப்புச் சான்றிதழோ அல்லது வாரிசு ஆவணங்களோ இல்லை. அதிகாரிகளின் சிக்கலான நடைமுறைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்த அவர், ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சத்தை அடைந்தார். திங்கட்கிழமை அன்று, கிராமத்துச் மயானத்திற்குச் சென்ற ஜிது, அடக்கம் செய்யப்பட்ட தனது சகோதரியின் உடலைத் தோண்டி எடுத்து, அதிலிருந்த எலும்புக் கூட்டை ஒரு துணியில் மூட்டை கட்டினார். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், அந்த எலும்புக் கூட்டு மூட்டையைத் தோளில் சுமந்தபடி 3 கிலோமீட்டர் நடந்து வங்கிக்கு வந்தார்.
பொதுமக்கள் ஆவேசமும் போலீஸ் நடவடிக்கையும்
வங்கி வாசலில் எலும்புக் கூட்டுடன் நின்ற ஜிது முண்டாவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டனர். மனிதாபிமானமின்றிச் செயல்பட்ட வங்கி நிர்வாகத்தின் மீது ஊர் மக்கள் கடும் ஆவேசம் அடைந்தனர். "ஒரு ஏழை தனது பணத்தைப் பெறுவதற்கு இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்த வேண்டுமா?" என அவர்கள் கேள்வி எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜிதுவைச் சமாதானப்படுத்தி எலும்புக் கூட்டை மீட்டனர். இந்த விவகாரம் மனிதாபிமான அடிப்படையில் கையாளப்படும் என்றும், வங்கி நிர்வாகத்திடம் இது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்றும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.
