இந்தியாவில் இந்த ஆண்டு ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதற்கான தேர்தல் தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் தற்போது முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில் புதுச்சேரி, அசாம் மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இன்று (மார்ச் 23) கடைசி நாளாகும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 135 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் ஏற்கனவே தங்களது மனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான தொகுதிப் பங்கீடு இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், அது குறித்த இறுதி முடிவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் பலரும் இன்று தங்களது மனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர்.
அசாம்:
அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி ஆறு கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கிறது. தனது வேட்பாளர் பட்டியலை நேற்று இறுதி செய்த காங்கிரஸ், இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்கிறது. அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஜலுக்பாரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
கேரளா:
கேரளாவைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. நேற்று வரை அங்கு 362 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று வேட்புமனுத் தாக்கலுக்குக் கடைசி நாள் என்பதால், பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் அதிக அளவில் மனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில், தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் திரும்பப் பெற விரும்புவோர் வரும் மார்ச் 26-ஆம் தேதிக்குள் அதைச் செய்துகொள்ளலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
