மத்திய அரசின் உத்தரவின் பேரில், எண்ணெய் விநியோக நிறுவனங்கள் புதிய கேஸ் இணைப்புகளை வழங்குவதை இடைக்காலமாக நிறுத்தி வைத்துள்ளன. இதற்கு முக்கிய காரணமாக, ஏற்கனவே சிலிண்டர் வைத்திருக்கும் சிலர் கூடுதல் சிலிண்டர்களைப் பெற பிற நபர்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி புதிய இணைப்புகள் பெற்றதாக எழுந்த புகார்கள் குறிப்பிடப்படுகின்றன.
மேலும், மேற்காசிய நாடுகளில் கடந்த மார்ச் மாத தொடக்கத்திலிருந்து நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவிற்கு எரிபொருள் கொண்டு வரும் கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சிலிண்டர் விநியோகத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நகர்ப்புறங்களில் கேஸ் சிலிண்டர் முன்பதிவிற்கான இடைவெளி 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இது 45 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தவறான முறையில் கூடுதல் இணைப்புகள் பெறப்படுவது அதிகரித்துள்ளதால், விநியோகத்தை சீராக்கும் வரை புதிய இணைப்புகள் வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமை சீரானதும் மீண்டும் புதிய கேஸ் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது
