மருத்துவ உலகில் 'Persistent Vegetative State' என்று அழைக்கப்படும் உணர்வற்ற நிலையில், பல ஆண்டுகளாகக் கிடக்கிற ஹரிஷ் ராணாவின் வழக்கு ஏற்கனவே நாடு தழுவிய கவனத்தைப் பெற்றது. 2013-ல் நான்காவது மாடியிலிருந்து விழுந்து மூளைக் காயமடைந்த ஹரிஷ் ராணாவிற்கு, கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. தற்போது மும்பையில் 35 வயதான ஆனந்த் தீட்சித் என்பவரும் அதே நிலையில் உள்ளார்.
கனவுச் சக்கரம் தந்த காலன்
ஆனந்த் தீட்சித்தின் இந்த நரக வேதனை 2023, டிசம்பர் 29 அன்று கோரக்பூரில் தொடங்கியது. தான் ஆசை ஆசையாய் வாங்கிய புதிய ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற அதே நாளில் அவர் விபத்துக்குள்ளானார். அன்றிலிருந்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் உணர்வற்ற நிலையில் இயந்திரங்களின் உதவியோடு சுவாசித்துக் கொண்டிருக்கிறார். அவரது உதவியாளர் அர்ஜுன் பிரஜாபதி, கடந்த 18 மாதங்களாக ஆனந்த் ஒருமுறை கண்ணையாவது சிமிட்ட மாட்டாரா என்று ஏங்கித் தவிக்கிறார். ஆனால், அந்த அறையில் மௌனம் மட்டுமே எஞ்சி நிற்கிறது.
நிதியிழப்பும் அதிகாரத்தின் அடியும்
ஆனந்தின் உயிரைத் தக்கவைக்க அவரது குடும்பம் சுமார் 4 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்துள்ளது. தங்களது சேமிப்பு, நிலம் என அனைத்தையும் விற்றுப் போராடி வருகின்றனர். இந்தச் சோகத்திற்கு நடுவே, மும்பை மாநகராட்சி (BMC) அவர்கள் குடியிருந்த வீட்டை இடித்துத் தள்ளியது. கட்டிடக் கலைஞர் மற்றும் மாநகராட்சிக்கு இடையிலான சட்டச் சிக்கலால், ஒரு நோயாளி வீட்டில் இருப்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் அந்த வீடு இடிக்கப்பட்டது. தற்போது இடிபாடுகளுக்கு நடுவே நிர்க்கதியாக நிற்கும் அந்தக் குடும்பம், வாடகை வீட்டில் தங்கி ஆனந்துக்குச் சிகிச்சை அளித்து வருகிறது.
காப்பீட்டு நிறுவனத்தின் துரோகம்
"மருத்துவமனை கட்டணங்களால் நாங்கள் நிதி ரீதியாகச் சூறையாடப்பட்டோம்" என்று ஆனந்தின் தந்தை வேதனையுடன் கூறுகிறார். 'கேர் ஹெல்த் இன்சூரன்ஸ்' (Care Health Insurance) நிறுவனம் இவர்களது மருத்துவக் கோரிக்கையை நிராகரித்ததால், கூடுதலாக 50 லட்சம் ரூபாய் கடன் சுமை ஏறியுள்ளது. "அவர்கள் எங்களுடைய வீட்டை மட்டுமல்ல, எங்கள் கௌரவத்தையும் பறித்துவிட்டார்கள்" என்று அவரின் குடும்பம் கண்ணீருடன் தெரிவித்துள்ளது.
தாயின் அசைக்க முடியாத நம்பிக்கை
இவ்வளவு துயரங்களுக்கு மத்தியிலும் ஆனந்தின் தாய் நம்பிக்கையை இழக்கவில்லை. மகனின் மொபைல் போன் மற்றும் கைக்கடிகாரத்தை இன்றும் தயார் நிலையில் வைத்துள்ளார். "என் மகன் ஒருநாள் 'அப்பா' என்று கூப்பிடுவான், ஏதோ ஒரு அதிசயம் நடக்கும் என்று நான் காத்திருக்கிறேன். அவர்கள் எங்கள் வீட்டை இடிக்கலாம், ஆனால் என் நம்பிக்கையை அல்ல" என்று அவர் கூறினார்..
