டிஜிட்டல் யுகத்தில் உலகத் தலைவர்கள் அனைவரும் சமூக ஊடகங்கள் வழியாக மக்களுடன் தொடர்பில் இருக்கும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராம் தளத்தில் எட்ட முடியாத ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தப் புகழ்பெற்ற புகைப்படப் பகிர்வுத் தளத்தில் 100 மில்லியன் (10 கோடி) பின் தொடருபவர்களைக் கடந்த உலகின் முதல் அரசியல் தலைவர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். எக்ஸ் (X) மற்றும் பேஸ்புக் தளங்களைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராமிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ள மோடி, இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே தனக்கிருக்கும் செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
உலக நாடுகளின் பட்டியல்
இந்தப் பட்டியலில் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 43.2 மில்லியன் ஃபாலோவர்ஸ்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர்களுக்கு இடையேயான இடைவெளி மிக அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ (15 மில்லியன்), பிரேசில் அதிபர் லூலா டா சில்வா (14.4 மில்லியன்), துருக்கி அதிபர் எர்டோகன் (11.6 மில்லியன்) மற்றும் அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய் (6.4 மில்லியன்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். உலகத் தலைவர்களின் ஒட்டுமொத்தப் பட்டியலிலும் இந்தியப் பிரதமர் முதலிடத்தைப் பிடித்து முதன்மையான 'டிஜிட்டல் தலைவராக' உருவெடுத்துள்ளார்.
